ஐ.பி.எல். 2வது தகுதிச்சுற்று ஆட்டத்தில் சுப்மன் கில்லின் அதிரடி சதம், மோகித் சர்மாவின் அபார பந்துவீச்சால்,  மும்பை அணியை  62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய, குஜராத் அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது….

132
Advertisement

ஐ.பி.எல். 2வது தகுதிச்சுற்று போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்றிரவு நடைபெற்றது.

இதில் மும்பை இந்தியன்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இந்த போட்டியில் முதலில் ஆடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 3 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்து சுப்மன் கில், நடப்பு சீசனில் 3வது சதத்தை பதிவு செய்தார். அதிரடியாக ஆடிய சுப்மன் கில் 10 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் என 129 ரன்கள் குவித்தார். இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணி வீரர்கள், சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர்.

அதிகபட்சமாக சூர்யகுமார் 61 ரன்களும், திலக் வர்மா 43 ரன்களும் சேர்த்தனர். சிறப்பாக பந்துவீசிய மோகித் சர்மா 5  விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இதனால், மும்பை அணி 18.2 ஓவர்களில் 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற குஜராத் அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளை நடைபெறும் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டியில் சென்னை –  குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.