மீன்களின் இனப்பெருக்கத்திற்காக தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில், 61 நாள் மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

40
Advertisement

மீன் வளத்தை பெருக்கவும், மீன் வளத்தை பாதுகாக்கவும், கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் படி ஆண்டு தோறும் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜீன் மாதம் 14ஆம் தேதி வரையிலான  61 நாட்களுக்கு கிழக்கு கடலோர பகுதிகளில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த மீன்பிடி தடைக்காலம், தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த மீன்பிடி தடைக்காலத்தில், விசைப்படகுகள், இழுவை படகுகள் மூலம் மீன் பிடிக்க அனுமதி அளிக்கப்படாது. ஆனால் அதேசமயம் கட்டுமர படகுகள், நாட்டு படகுகளில் வழக்கம் போல் மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. 61 நாள் மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதால், ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற விசைப்படகுகள் அனைத்தும் கரைக்கு திரும்பியுள்ளன.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில்விசைப்படகுகள் அனைத்தும் கரைகளில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்கள், படகுகள், வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை பழுது நீக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். மீன்பிடி தடைக்காலத்தால், தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி வரையிலும், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 15 கடலோர மாவட்டங்களில்  69 லட்சம் மீனவ குடும்பங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கபடுகின்றனர். மீன்பிடி தடைக்காலத்தின் போது மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி தமிழக அரசின் சார்பில் நிவாரணம் வழங்கப்படுகிறது.