வசூல் வேட்டையில் வனத்துறை அதிகாரிகள் கால்நடை உரிமையாளர்கள் வேதனைவசூல் வேட்டையில் வனத்துறை அதிகாரிகள்

68
Advertisement

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல், பென்னாகரம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் கால்நடை உரிமையாளர்கள் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வருகின்றனர். இவர்கள் தங்களின் விவசாய நிலங்களில் போதிய அளவில் இட வசதி இல்லாத காரணத்தால் தாங்கள் வளர்த்து வரும் வளர்ப்பு மாடுகளை ஒகேனக்கல் பென்னாகரம் ஆகிய வனச்சரகத்துக்கு
உட்பட்ட காட்டுப்பகுதிகளில் மேய்ச்சலுக்கு விட்டு வருகின்றனர். இவ்வாறு மேய்ச்சலுக்காக ஆயிரக்கணக்கான மாடுகள் வனப்பகுதிகளுக்குள் சென்று தங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை தேடி உட்கொண்டு வளர்ந்து வருகின்றன. மாடுகளை வனப் பகுதிகளுக்குள் மேய்ச்சலுக்காக விடுவதற்காக மாட்டின் உரிமையாளர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 3000, 5000 என வனத்துறை அதிகாரிகள் வசூலிப்பதாக மாட்டின் உரிமையாளர்கள் இடையே குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் மாடுகளை பொங்கல் பண்டிகைக்காக காட்டுப்பகுதிகளில் இருந்து வீட்டிற்கு அழைத்துச்செல்லும் வயதான ஒருவரிடம் வனத்துறையினர் 3 ஆயிரம் ரூபாய் வசூல் செய்ததாக குமுறும் வீடியோ ஒன்று வெளியானது. இது மட்டுமின்றி நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வந்த நபர் ஒருவரிடமிருந்து, சின்னாறு வனப்பகுதியில் கன்று குட்டிகளை பிடித்து கட்டி வைத்துக்கொண்டு 5 லட்சம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே கன்று குட்டிகளை விடுவிப்பேன் என ஒகேனக்கல் வனச்சரக அலுவலர் ஒருவர் தெரிவித்ததாகவும், பின்னர் பேரம் பேசி பத்தாயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு கன்று குட்டிகளை மீட்டு வந்ததாகவும், வனச்சரக அலுவலர்
மீது மாட்டின் உரிமையாளர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பத்திரிக்கை நாளிதழ்களில் செய்தி வெளியிட்டால் தங்களுக்கு பிரச்சனை ஏற்படும் எனவும் மாடுகளை காட்டுப்பகுதிகளுக்குள் வனத்துறையினர் விடுவதற்கு வாய்ப்பு மறுக்கப்படும் என அஞ்சுவதாக மாட்டின் உரிமையாளர் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து ஒகேனக்கல் வனச்சரக அலுவலர் குறித்து விசாரித்தபோது வனச்சரக அலுவலர், சுமார் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக, ஒரே மாவட்டத்தில் அதிகாரிகளை கையில் வைத்துக்கொண்டு, அதிக வருடம் தொடர்ச்சியாக பணி செய்து வருவதாகவும் சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் கால்நடை உரிமையாளர்கள் மற்றும் வனப்பகுதியில்
மாடுகளை மேய்க்கும் நபர்களிடம் பணத்தை மிரட்டி வசூல் செய்வதாகவும், இது குறித்து பலமுறை வனத்துறை மேல் அதிகாரிகளை நேரடியாக சென்று சந்தித்து, வனச்சரக அலுவலர் மீது புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மாவட்ட வனத்துறை அலுவலர், ஒகேனக்கல் வனச்சரக அலுவலருக்கு மட்டும் பரிந்து பேசுவதாக மாட்டின் உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே ஒகேனக்கல் வனச்சரக அலுவலர் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தங்களுக்கும் தங்களின் கால்நடைகளுக்கும் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல், கால்நடைகளை வனச்சரகத்துக்கு உட்பட்ட காட்டுப்பகுதிகளில் மேய்ச்சலுக்கு விடுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

சத்தியம் செய்திகளுக்காக தருமபுரி மாவட்ட செய்தியாளர் சீனிவாசனுடன்
செய்திக்குழு.