37
Advertisement

புதுச்சேரி மாநிலம் உப்பளம் தொகுதி உப்பனாறு வாய்க்காலை ஒட்டிய, ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் 65 வயது சாவித்திரி. இவரின் கணவர் ரங்கநாதன் இறந்துவிட்டதால் மகள் சித்ரா, மருமகன் சுரேஷ் ஆகியோருடன் அரசு இலவசமாக கொடுத்த 240 சதுரஅடி இடத்தில் வீடு கட்டி வசித்து வந்தார். மருமகன் சுரேஷ் டிரைவராக பணியாற்றி வந்தார். அவ்வப்போது கிடைத்த பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்து வீட்டின் மாடி கட்டிடத்தை கட்டி முடித்தனர். இந்த வீட்டின் புதுமனை புகுவிழா வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் மேட்டுப்பகுதியைச் சேர்ந்த சாக்கடை நீர் அனைத்தையும் வெளியேறும் வழியாக உள்ள உப்பனாறு வாய்க்காலில், கரையை பலப்படுத்தி சீரமைக்கும் பணிகள் 6 மாதத்துக்கு மேலாக நடைபெற்று வந்தது. இதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் வாய்க்காலின் மண் அள்ளும் பணியில் நடைபெற்றது. இதனால் வாய்க்கால் ஓரம் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு அதிர்வு ஏற்பட்டு வீடு சாயும் நிலைக்கு வந்ததால், அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஒப்பந்ததாரர்களிடம் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது சாவித்திரி புதிதாக கட்டிய 3 மாடி வீடு லேசாக சாய்ந்தது. இதையடுத்து வாய்க்கால் கட்டும் ஒப்பந்ததாரரிடம் சாவித்திரி குடும்பத்தினர் முறையிட்டனர். போலீசாரும், பொதுப்பணித்துறையினரும் அங்கு வந்து பார்வையிட்டனர். தொடந்து அங்கு வந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ அன்பழகனிடமும், வீடு சாய்ந்துள்ளது என புகார் தெரிவித்தனர். இதையடுத்து அன்பழகனும் அங்கு வந்து வீடு சரிந்துள்ள பகுதியை நேரில் வந்து பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த 3 மாடி வீடு சீட்டுக்கட்டு போல சரிய தொடங்கியது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் தலைதெறிக்க ஓடினர். வீடு அப்படியே சரிந்து 3ம் தளம் தனியாக பிரிந்து கால்வாயிலும், 2ம் தளம் தனியாக பிரிந்து கால்வாய் மேற்புறத்திலும் நொறுங்கி விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக வெளியே நின்று இருந்தவர்களும் ஓடியதால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த ஆபத்தும், எந்த வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. இந்த வீடு விழுந்தபோது அருகிலிருந்த ஓட்டுவீடும் சரிந்து வாய்க்காலில் விழந்தது. இதையடுத்து ஆட்டுப்பட்டியை சேர்ந்தவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த அமைச்சர் லட்சுமிநாராயணன், அங்கு வந்து பொதுமக்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார். வீடு இடிந்து விழுந்தது குறித்து ஆய்வு செய்து, விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தார். அதை ஏற்க மறுத்து பொதுமக்கள் மறியலை தொடர்ந்தனர். இதனை அடுத்து தகவலறிந்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, ஆட்டுப்பட்டிக்கு வந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதில் மூன்று மாடி கட்டிடம் மட்டுமல்லாது அந்த கட்டிடத்தை சுற்றி உள்ள பல வீடுகள் பல வீடுகளில் விரிசல் ஏற்பட்ட காரணத்தால், அப்பகுதியை சேர்ந்தவர்கள் இரவு முழுவதும் தங்களது வீடுகளில் தங்காமல் சாலையிலும் தங்கி இருந்தாகவும் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறுகையில்., எங்களுக்கு உரிய பாதுகாப்பை கொடுத்துவிட்டு பக்க சுவரை பணியை தொடர வேண்டும், பாதிக்கப்பட்ட வீடுகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்  என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனிடையே ஆட்டுப்பட்டி உப்பனாறு வாய்க்கால் விழுந்த மூன்று மாடி கட்டிடம் தற்போது காட்சி பொருளாக மாறியுள்ளது. இதனிடையே  சரிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருடன் முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் முதலமைச்சர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய முதல்வர், மாற்று வீடு தருவதாகவும் நிதி உதவி தருவதாகவும் தற்காலிகமாக பள்ளி கொட்டகையில் தங்க வைப்பதாகவும்  உறுதியளித்தார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அதிமுக சார்பில் மாநில செயலாளர் அன்பழகன் ரூபாய் 75 ஆயிரம் நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்., பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூபாய் 20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், அதே பகுதியில் வீடு கட்டிக் கொள்ள அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும், அலட்சியமாக செயல்பட்ட ஒப்பந்ததாரரிடம் இழப்பீடு தொகை பெற்று தர வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்தை வைத்து அரசியல் செய்யாமல் அவர்களுக்கு நிதி உதவி வழங்க  அனைவரும் முன்வர வேண்டும் என தெரிவித்தார். புதுமனை புகுவிழா காண இருந்த வீடு தற்போது ஒப்பந்ததாரரின் அலட்சியத்தால் காட்சிப்பொருளாக மாறியுள்ள நிகழ்வு வீட்டு உரிமையாளர் மட்டுமின்றி அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-ஜெயக்குமார்