“சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் “தம்பி” என்ற சின்னத்துடன் உலக பண்பாட்டுத்திருவிழாவாக நடைபெறுகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

324
Advertisement

“சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் “தம்பி” என்ற சின்னத்துடன் உலக பண்பாட்டுத்திருவிழாவாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெறுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உலக அளவில் இந்தியாவிற்கு பெருமையளிக்கும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெறுகிறது என்று கூறினார். உடல்நலக்குறைவால் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் அழைக்க இயலவில்லை என்பதை குறிப்பிட்ட முதல்வர், பிரதமர் செஸ் ஒலிம்பியாட்டை தொடங்கி வைப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார். கி.பி.ஆறாம் நூற்றாண்டுக்கு முன் தமிழகத்தில் செஸ்  விளையாடப்பட்டதை குறிப்பிட்டார். 

மாமல்லபுரம் அருகில் உள்ள சதுரங்க பட்டினம், சத்ராஸ் என்று அழைக்கப்பட்டதை யும் சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் முதன்முறையாக செஸ் கிளப் – ஐ உருவாக்கிய மானுவல் ஆரோனின் ஆலோசனைப்படி சோவியத் ரஷ்யாவில் போட்டிகள் நடைபெற்றதையும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் 75 கிராண்ட் மாஸ்டர்களில் 26 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர் பெருமிதத்தோடு தெரிவித்தார். 

சகோதரத்துவத்தை வலியுறுத்தும் “தம்பி”என்ற இலச்சினை மூலம், செஸ் ஒலிம்பியாட் உலக பண்பாட்டு திருவிழாவாக திகழ்கிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.