விபத்துபோல் நடந்த கொலை… பின்னணியில் மாப்பிள்ளை….!

167
Advertisement

கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை அச்சிராமன் தெருவில் நடந்து சென்ற நபர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தை பார்த்த அதிர்ந்துபோன அந்த பகுதி பொதுமக்கள் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய அந்த நபரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து செவ்வாய்பேட்டை காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், இதுகுறித்த தகவலின் பேரில் செவ்வாய்பேட்டை காவல்துறையினர் அந்த நபரின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்த நபர் செவ்வாய்பேட்டை பாண்டுரங்கன் கோயில் தெருவை சேர்ந்த வெள்ளி கொலுசு வியாபாரியான சங்கர் என்பதும், பால் வாங்குவதற்காக கடை வீதிக்கு வந்து, பால் வாங்கிவிட்டு மீண்டும் வீடு திரும்பி வந்த போது அதிவேகமாக வந்த கார், அவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றது தெரிய வந்தது.

இதனையடுத்து சங்கர் விபத்தில் உயிரிழந்ததாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், வெள்ளி வியாபாரிகள், சங்கரின் உறவினர்கள் இது விபத்தல்ல என்றும், திட்டமிட்டு கார் ஏற்றி கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து செவ்வாய்பேட்டை காவலர்கள், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர்.

அதில் கருப்பு நிற கார் ஒன்று சங்கர் மீது மோதிவிட்டு நிற்காமல் செல்வதும், பின்னர் அந்த பகுதியில் உள்ள தெரு முனையில் சுமார் அரை மணி நேரம் நின்று பிறகு அங்கிருந்து சென்றதும் காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் அந்த காரில் நம்பர் பிளேட் இல்லாதது காவல்துறையினரின் சந்தேகத்தை உறுதி செய்தது.

விபத்துக்கு காரணமான அந்த கார் யாருடையது? தொழில் போட்டி காரணமா? அல்லது முன்விரோதம் காரணமாக? சங்கர் கொல்லப்பட்டாரா? அல்லது குடும்ப பிரச்சனை ஏதும் உள்ளதா? என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். சங்கருக்கு எதிரிகள் என்று யாராவது இருக்கிறார்களா என உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரித்தனர்.

அப்போதுதான் சங்கருக்கும் அவரது தங்கை கணவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததும், மேலும் சங்கரின் தங்கை அவரது கணவரை பிரிந்து தனது இரு குழந்தைகளுடன் அண்ணன் சங்கரின் வீட்டில் வசித்து வருவதும் தெரியவந்தது.

இதனையடுத்து மைத்துனர் சுபாஷ்பாபுவை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதலில் சங்கர் கொல்லப்பட்டதுக்கும் தனக்கு எந்த சம்பந்தமும் கிடையாது என அப்பாவி போல கூற, போலீசார் தங்களது பாணியில் விசாரணையை தொடங்கிய நிலையில், சங்கரை கூலிப்படை மூலம் காரை ஏற்றி கொலை செய்ததை சுபாஷ்பாபு ஒப்புக்கொண்டுள்ளார்.

காவல் துறையினரிடம் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில்,

“சங்கரின் தங்கை விஜயலட்சுமிக்கும் எனக்கும் திருமணம் நடந்தது. எங்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். மனைவி, குழந்தைகள் சங்கர் வீட்டில் இருக்கிறார்கள். நான் எனது மகன்களை பார்க்கவும் பேசவும் சங்கர் அனுமதிப்பதில்லை. இதனால் எனக்கு அவர் மீது ஆத்திரம் இருந்தது.

என்னுடைய இளைய மகனைப் பார்க்க பள்ளிக்கு சென்றிருந்தது தொடர்பாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சங்கரும், வித்யாலட்சுமியும் என்னை அவதூறாக பேசினர். அதன் பின்னர் மனைவியுடன் சேர்த்து வைக்கும்படி வீட்டிற்கு சென்று கேட்டபோதும், சங்கர் என்னை அவதூறாக பேசி அனுப்பினார்.

இதனால் ஆத்திரத்தில் எனது மகன்களிடம் பேச தடையாக இருக்கும் சங்கரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து, கூலிப்படையை ஏவி கொலை செய்தேன். இதற்காக ரூ.2 லட்சம் வரை செலவு செய்துள்ளேன் எனக் கூறியுள்ளார்.

சங்கர் கொலை செய்யபடுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், சுபாஷ் பாபு சேலத்தை சேர்ந்த பிரபல ரெளடி ஒருவரை தொடர்பு கொண்டதாகவும் காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சங்கர் கொலைக்கு காரணமான சுபாஷ்பாபு கைது செய்யப்பட்டாலும், கூலிப்படையினர் பற்றிய எந்த தகவல் இன்னும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இந்த வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்ப பிரச்னை காரணமாக வெள்ளி வியாபாரியை அவரது மைத்துனரே கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

-ஆனந்த