ராஜா ராணி குளம் மண்ணுக்குள் மறைந்த மர்மம்…

64
Advertisement

ராணிகள் மட்டுமே குளிக்க வெட்டப்பட்ட குளம்…

இயற்கை அழகை ரசிக்க உருவாக்கப்பட்ட தோட்டம்…

விஜயநகர கட்டுமான பணியில் உருவாக்கப்பட்ட பேரழகு…

ராஜா ராணி குளம் மண்ணுக்குள் மறைந்த மர்மம்…

சேலம் கோரிமேடு அருகே உள்ள நகரமலை அடிவாரம் பின்புறம் பகுதியில் உள்ளது ராஜா ராணி தெப்பக்குளம். திருமணிமுத்தாற்றின் பிரதான ஓடையின் மேற்கு கரையில் அமைந்துள்ள மிக பழமை வாய்ந்த இந்த ‘ராஜா ராணி’ தெப்பக்குளம் உள்ளது. ஏறத்தாழ சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பாக குறுநில மன்னர்களின் ஆட்சி காலத்தில் வெட்டப்பட்டது.

பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சேலத்தை ஆண்ட குறுநில மன்னர்களான பெரிய ராஜா மற்றும் சின்ன ராஜா ஆகிய இருவரும், தங்கள் ஆட்சிக்குட்பட்ட இந்தப் பகுதியில் திருமண முத்தாற்றில் பிரதான ஓடையான மேற்கு கரையில் நகர மலை அடிவாரத்தில் இரண்டு தெப்ப குளங்களை வெட்டினர்.

இந்த தெப்ப குளங்கள் ‘ராஜா’, ‘ராணி’ குளம் என்று அழைக்கப்பட்டன. மேலும் இந்த தெப்ப குளங்களை பெரிய ராஜா குளம், சின்ன ராஜா குளம் என்றும் அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. ‘ராணி’ குளம் தற்பொழுது சேலம் மத்திய சிறை வளாகத்தில் உள்ளே இருந்தது என்றும் சிறை கட்டுமானத்தின்போது அந்த குளம் மூடப்பட்டுவிட்டது. அதாவது மண்ணுக்குள் மறைந்து விட்டது எனவும் சொல்லப்படுகின்றது. எஞ்சிய தெப்பக்குளம் ‘ராஜா ராணி’ குளம் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பெயரே மாநகராட்சி பதிவேட்டிலும் உள்ளது.

பெரிய ராஜா மற்றும் சின்ன ராஜா ஆகியோர் இந்த இரு தெப்பக்குளங்களையும் சுற்றி ஒரு அழகிய தோட்டத்தை உருவாக்கி இருந்தார்கள். இந்த தோட்டத்திற்கு இரண்டு ராஜாக்களும் அவர்களது ராணிகள் மட்டுமே குளிக்கவும் உலாவவும் இயற்கையை அழகை ரசிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

ஆனால் இன்றைக்கு அதன் சிறு சுவடுகள் கூட இல்லை என்பது வேதனையான ஒன்றாக இந்த பகுதி மாறியுள்ளது. விஜயநகர கட்டுமான பணியில் உருவாக்கப்பட்ட இந்த குளம் மிக அற்புதமான கட்டுமான அமைப்பைக் கொண்டது. செவ்வக வடிவ கற்களை வைத்து ஒவ்வொரு கல்லும் ஒன்றைப்பின் ஒன்று பின்னிப்பிணைந்து இருக்கும்படி குலத்தின் படிக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளது.மேலும் குளத்தை சுற்றிலும் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கருங்கல்லால் செதுக்கப்பட்ட சுற்றுசுவர் உள்ளது.

தற்பொழுது பராமரிப்பின்றி பழுதடைந்து வரும் ராஜா ராணி தெப்பக்குளம் அசுத்தமான நீர் தேங்கி காணப்படுவதுடன் விஷமிகளின் கூடாரமாக விளங்கி வருகிறது என்றும் கூறப்படுகின்றது. குளத்தை சுற்றிலும் பாதுகாப்பாக இருக்கும் கம்பி வேலிகள் இருந்தாலும் தெப்பக்குளத்தில் சுற்றுப்புற சுவர்கள் பெயர்க்கப்பட்டு கிடக்கிறது.

இந்த தெப்பக்குளத்தை மாநகராட்சி நிர்வாகம் தனி கவனம் செலுத்தி தூர்வாரி அழகுப்படுத்தி, வழிபாதையும் சீரமைத்து பராமரிக்க வேண்டும். வரலாற்று ஆராய்ச்சிகளுக்கு இன்னும் இடமளித்து ‘ராஜா ராணி’ குளத்தை தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை ஆய்வு செய்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் வரலாற்று ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ஆனந்த்