22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்தில் இன்று தொடங்குகிறது.

354

72 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரம் வீரர்கள் பங்கேற்கும் 22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்தில் இன்று தொடங்குகிறது. காமன்வெல்த் தொடக்க விழாவில் இந்திய தேசிய கொடியை பி.வி.சிந்து ஏந்தி செல்ல உள்ளார்.

22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் இன்று முதல் ஆகஸ்டு 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் நீச்சல், தடகளம், பேட்மிண்டன், கூடைப்பந்து, கைப்பந்து, குத்துச்சண்டை, ஹாக்கி, மல்யுத்தம், ஸ்குவாஷ் உள்பட 20 விளையாட்டுகளில் மொத்தம் 280 போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் முறையாக காமன்வெல்த்தில் நடப்பு ஆண்டு மகளிர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. காமன்வெல்த் போட்டியில் 72 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்தியா சார்பில் 15 விளையாட்டுகளில் 200க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்திய நேரப்படி இன்று இரவு 11.30 மணிக்கு தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், இந்திய சார்பில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இந்திய தேசிய கொடியை ஏந்தி செல்ல உள்ளார். அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளுடன் கூடிய தொடக்க விழாவில் சுமார் 30 ஆயிரம் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என 66 பதக்கங்களை வென்றது. இந்தியா இந்தமுறை அதைவிட கூடுதல் பதக்கங்களை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய அணி ஹாக்கி, பேட்மிண்டன், வில்வித்தை, பளுதூக்குதல், துப்பாக்கிசுடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது.