பிரதமர் மோடி சென்னை வருகை: 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

387
Advertisement

பிரதமர் மோடியின் வருகையையொட்டி 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, சென்னை முழுவதும் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வரும் பிரதமர் மோடி, செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா மற்றும் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள உள்ளார். இன்று மாலை 5:30 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, மாலை 6 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க உள்ளார்.

இதைதொடர்ந்து இன்று இரவு ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுக்கும் பிரதமர் மோடி, நாளை காலை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடியின் 2 நாள் பயணத்தையொட்டி சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை விமானம் நிலையம், ஆளுநர் மாளிகை, அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கில் 7 அடுக்கு பாதுகாப்பு போடடப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு, இன்று முதல் இரண்டு நாட்கள் ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள், பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவிற்காக, சென்னை வருவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் காத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இந்த சிறப்பான போட்டி இந்தியாவில், அதுவும் செஸ் விளையாட்டுடன் பெருமைமிகு தொடர்பைக் கொண்டுள்ள தமிழ்நாட்டில் நடைபெறுவது நமக்கு மிகப்பெரிய பெருமை என்று தெரிவித்துள்ளார்.