அமலாக்கத்துறை தலைமைச் செயலகம் வர என்ன தேவை?

218
Advertisement

பா.ஜ.க.வின் மிரட்டல் அரசியல் திமுகவிடம் செல்லாது என்று கூறியுள்ள ஸ்டாலின், செந்தில்பாலாஜி ரெய்டுக்கு ஒத்துழைப்பை தரும் நிலையில் அமலாக்கத்துறையினர் தலைமைச் செயலகம் வர என்ன தேவை? என கேள்வி எழுப்பியுள்ளார்.

தலைமைச் செயலகத்திலும் ரெய்டு நடத்துவோம் என்று காட்டவோ, அல்லது அதனைக் காட்டி மிரட்டவோ விரும்புகிறீர்களா என வினவியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கொடுத்துள்ள பதிலடி வருமாறு;

”தன் வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாகத் தனக்கு எதிரான அரசியல் சக்திகளை பா.ஜ.க. பழிவாங்கும். அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி இது மட்டும்தான் என்று நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன். இதற்கு இந்திய அளவில் எத்தனையோ எடுத்துக்காட்டுகள் சமீப காலங்களில் பல்வேறு மாநிலங்களில் நடந்துள்ளன.

ஒரு மாநில அரசின் மாண்பு காக்கும் தலைமைச் செயலகத்துக்குள் மத்திய காவல் படையை அழைத்து வந்து அதிகாரிகள் சோதனை நடத்துவதுதான் அரசியல்சட்ட மாண்பைக் காப்பதா? கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், 2016-ஆம் ஆண்டு அன்றைய தலைமைச் செயலாளராக இருந்த ராம்மோகன்ராவ் அவர்களின் வீட்டிலும், தலைமைச் செயலகத்திலும் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது.

“தலைமைச் செயலகம் என்பது மாநில அரசின் மூளை போன்ற முக்கியப் பகுதி. கூட்டுறவு – கூட்டாட்சி பேசிக் கொண்டே அந்தத் தலைமைச் செயலகத்தில் மத்திய போலீஸ் படையை அனுப்பி, தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன்ராவ் அலுவலகத்துக்குள்ளேயே ரெய்டு நடத்த வேண்டும் என்று வருமான வரித்துறையை இயக்கியது.

இது மாநில சுயாட்சிக் கொள்கைக்கு எதிரானது” என்று, அன்றைய ஆட்சியாளர்கள் கண்டிக்காமல் இருந்தபோது , அதனைக் கண்டித்து நான் அறிக்கை வெளியிட்டேன். எனவே, யாருக்கு நடந்தது என்பதல்ல முக்கியம். எங்கு நடத்தப்பட்டது என்பதே முக்கியம். மிகத்தவறான முன்னுதாரணங்களைத் தொடர்ந்து பா.ஜ.க. உருவாக்கி வருகிறது. பா.ஜ.க.வின் மிரட்டல் அரசியலை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அரசியல்ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, புறவாசல் வழியாக அச்சுறுத்தும் அரசியல் செல்லுபடியாகாது என்பதை பா.ஜ.க. தலைமை உணர வேண்டும். அதை அவர்களே உணரும் காலம் நெருங்கிக் கொண்டுதான் இருக்கிறது.”