நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் திடீரென நின்ற லிப்ட்…சிக்கிய ஒன்றரை வயது குழந்தைஉள்ளிட்ட 14 நபர்கள் !

331
Advertisement

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ப்ளாட்பாரத்தில் இருந்து வெளியே செல்லுவதற்கு ஏதுவாக லிப்ட் வசதி ஒன்று உள்ளது. அந்த லிப்டில் பலரும் ஏறி இறங்கி செல்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு 8 மணி அளவில் அந்த லிப்டில் ஒரு கூட்டம் ஏறியுள்ளது. 7 ஆண்கள், 6 பெண்கள், ஒன்றரை வயது குழந்தை என மொத்தம் 14 பேர் லிப்டுக்குள் சென்றுள்ளனர். மேலே கிளம்பிய லிப்ட் திடீரென பாதியில் நின்றது.


மின்சாரம் தடையா என சில நிமிடங்கள் காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சிதான் ஏற்பட்டது. நேரம் ஓடிக்கொண்டே இருந்தாலும் லிப்ட் நகரவில்லை. ஏதோ கோளாறு என்பதை உணர்ந்தவர்கள் லிப்டுக்குள் எழுதப்பட்டிருந்த லிப்ட் ஆபரேட்டருக்கு அவசரமாக போன் செய்துள்ளனர்.ஆனால் அந்த எண்ணால் ஒரு பயனும் இல்லாமல் போனது. இதனால் லிப்டுக்குள் இருந்தபடியே அனைவரும்கூச்சலிட்டுள்ளனர். 14 பேர் ஒரே லிப்ட்டுக்குள் சிக்கியதால் சரியான காற்றோட்டமும் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் பயணிகள் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டுள்ளனர்.

பின்னர் இது தொடர்பாக தீயணைப்படை மற்றும் ரயில்வே காவலர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் பயணிகளை மீட்கும் வேலையில் ஈடுபட்டனர். லிப்டின் மேல் பகுதியை உடைத்து துளையிட்ட தீயணைப்பு வீரர்கள் உள்ளே சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் அனைவரும் மீட்கப்பட்டனர். மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரயில் நிலைய லிப்ட் இப்படி பழுதாக என்னகாரணம்? முறையாக பராமரிக்கப்பட்டதா? போன்ற கேள்விகளை பயணிகள் எழுப்பினர்.