மாணவர்களை விமானத்தில் பறக்க வைத்த நெல்லை ஆட்சியரின் அசத்தல் முயற்சி

511
Advertisement

நெல்லை மாவட்டத்தில் அரசு மேல் நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு IIT, JEE நுழைவுத் தேர்விற்கு பயிற்சி அளிக்கும் பொருட்டு அவர்களுக்கான இலவச பயிற்சியை நெல்லை ஆட்சியர் விஷ்ணு, இந்த வருடம் முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக தொடங்கியுள்ளார். JEE நுழைவுத் தேர்வுக்கான பயிற்சிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இலவச வகுப்புகளில் சேர்வதற்கு கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு இதில் பல்வேறு அரசு பள்ளியில் இருந்து 159 மாணவர்கள் மற்றும் 284 மாணவிகள் என மொத்தம் 443 மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர், இதில் மதிப்பெண் அடிப்படையில் 72 மாணவ, மாணவியர் அழைக்கப்பட்டு டிசம்பர் 18, 19 இல் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் மாணவர்களின் ஆர்வம், திறமை, பொருளாதார சூழ்நிலை ஆகியவற்றை கேட்டறிந்து 13 மாணவியர், 8 மாணவர்கள் என மொத்தம் 21 மாணவ, மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்,

இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் 21 மாணவ-மாணவிகளும் சென்று அங்கு நேரடியாக பல்வேறு விஷயங்களை கற்று கொள்ள ஆட்சியர் விஷ்ணு ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக கடந்த 9 ம் தேதி மற்றும் 10 ம் தேதி என இரண்டு நாட்கள் இந்த கல்விக்கான சுற்றுலா நடந்தது, இந்த பயணத்தின் முக்கிய அம்சமே நெல்லையில் இருந்து சென்னை செல்வதற்கு விமான பயணத்தை மாவட்ட ஆட்சியர் தேர்ந்தெடுத்தது தான். தான் கற்றுக் கொள்ளப் போகும் உயர்தொழில்நுட்ப பாடம் எந்த அளவுக்கு உயர்ந்தது அதற்காக எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும் உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், மாணவ-மாணவிகள் இதுவரை படத்தில் மட்டுமே பார்த்திருந்த விமானத்தில் அவர்களை இலவசமாக அழைத்துச் செல்ல தனது சொந்த நிதியை பயன்படுத்தியுள்ளார்

இந்த முயற்சி மாணவர்களை ஊக்கப்படுத்தும் ஒரு முயற்சியாக இருந்தாலும், பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களை முன் நோக்கி அழைத்து செல்லும் இது போன்ற செயலால் அனைவரின் பாராட்டையும், அன்பையும் வென்று வருவது குறிப்பிடத்தக்கது.