முதலமைச்சரின் முக்கிய அறிவிப்பு

242

காவிரி நீர் பிடிப்பு மற்றும் மேட்டூர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின்அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது.

மேட்டூர் அணை நீர்மட்டம்  115.35 அடியாக உள்ளது. நீர் இருப்பு 86.24 டிஎம்சியாகவும், நீர்வரத்து 46 ஆயிரத்து 353 கன அடியாகவும்  உள்ளது. அணையில் இருந்து ஆயிரத்து 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

காவிரி நீர்வரத்து தற்போதைய நிலையே தொடர்ந்தால் ஓரிரு நாளில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் 24ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நீர் திறப்பால் காவிரி டெல்டா மாவட்டங்களில்  4 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வழக்கமாக ஜுன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு வந்தநிலையில், இந்த ஆண்டு முதன்முறையாக மே மாதமே மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேட்டூர் அணை மே 24ம் தேதி திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தூர் வாரும் பணியை துரிதப்படுத்த வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விதை நெல் மற்றும் பயிர் கடன்களை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.