77 ஆண்டுகளுக்கு பின் நடந்த சம்பவம்

184
Advertisement

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.

முதல்கட்டமாக 3000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை நிரம்பியதையடுத்து மே – மாதமே குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதையொட்டி, சேலம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மேட்டூர் அணையை திறந்துவைத்தார்.

அணையின் மதகில் இருந்து பாய்ந்தோடிய தண்ணீரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூக்களை தூவினார்.

இதைத்தொடர்ந்து, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்டோர் பூக்களை தூவி அணை நீரை வரவேற்றனர்.

முதல்கட்டமாக, மூவாயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் அடுத்துவரும் நாட்களில் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் கல்லணைக்கு மேட்டூர் தண்ணீர் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் விரைவில் வந்தடையவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது

டெல்டா பகுதி குறுவை, சம்பா, தாளடி சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் மாதம் திறக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான்.

ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக கோடை காலத்திலேயே அதாவது மே மாதமே மேட்டூர் அணை திறக்கப்பட்டிருப்பது நாடு சுதந்திரம் பெற்ற பிறகு நடைபெறும் முதல் நிகழ்வாகும்.

மேட்டூர் அணை கட்டப்பட்டு 88 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், பருவமழை தாமதம் காரணமாக பெரும்பாலும் குறிப்பிட்ட காலத்திற்குப் பின் தாமதமாகவே தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

இந்த ஆண்டு கோடை மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக வந்த காரணத்தால், வழக்கமான காலத்திற்கு முன்னரே அணை திறந்துவிடப்பட்டுள்ளது.

நாடு விடுதலை பெறுவதற்கு முன் 1942 மற்றும் 1943 ஆம் ஆண்டுகளில் அணை கோடை காலத்திலேயே திறக்கப்பட்டதாக பதிவுகள் தெரிவிக்கின்றன.

தற்போது விடுதலைக்கு பின்னர் முதல்முறையாக கோடை காலத்திலேயே மேட்டூர் அணை திறக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேட்டூர் அணையில் தண்ணீர் வீணாகாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேட்டூர் அணையில் இன்று திறக்கப்பட்டுள்ள தண்ணீர் இந்த மாதம் 26 அல்லது 27-ந் தேதியன்று கல்லணையை வந்தடையும் வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் அங்கிருந்து அன்றே பாசனத்திற்காக நீர் திறந்துவிடும் பட்சத்தில், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் உள்ளிட்ட அனைத்து கட்டுமானப் பணிகளும் பாதிக்கப்பட்டு தண்ணீர் வீணாகும் அபாயம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மேட்டூரிலிருந்து திறந்து விடப்படும் நீரை முழுவதுமாக பயன்படுத்தும் வகையில், நீர் வீணாகாமல், அனைத்துத் தரப்பினரிடமும் கலந்தாலோசித்து, திறந்துவிடப்படும் நீர் அனைத்தும் பாசனத்திற்கு முழுமையாக பயன்படுத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்டா பாசனத்திற்காக, மேட்டூர் அணை முன்கூட்டிய திறக்கப்பட்டுள்ளதால், தஞ்சையில் அரசு அதிகாரிகளுக்கு இனிப்பு வழக்கி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால், வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்படாததால், கடைமடை வரை காவிரி நீர் சென்று சேருமா என்ற சந்தேகத்தை விவசாயிகள் எழுப்பியுள்ளனர்.