39 கோடியில் ‘கருணாநிதிக்கு நினைவிடம்’

Karunanidhi
Advertisement

மெரினா கடற்கரையில் 39 கோடிரூபாய் மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் 39 கோடிரூபாய் மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் வெளியிட்ட முதல் அறிவிப்பில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், நவீன தமிழகத்தை உருவாக்கிய சிற்பி என்றும் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக வாழ்க்கை முழுவதும் போராடியவர் கருணாநிதி என்றும் கூறினார்.

Advertisement

39 கோடிரூபாய் மதிப்பீட்டில் 2.21 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் நினைவிடத்தில் கருணாநிதியின் திரையுலக, அரசியல்,எழுத்துலக சாதனைகள் அனைத்தும் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

தோல்வி அவரை தொட்டதில்லை, வெற்றி அவரை கைவிட்டதில்லை என்றும் கூறினார்.

ஐந்து முறை முதல்வராகவும் 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பல்வேறு பொறுப்புகளை வகித்த கருணாநிதி, தமிழகத்தின் சமூக மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தவர் என புகழாரம் சூட்டினார்.

வரலாற்றில் கருணாநிதியின் பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்தார்.

எனது தந்தை தீவிர கருணாநிதி பக்தர் என்று தெரிவித்த ஓ.பி.எஸ். அவருடைய பெட்டியில் மனோகரா, பராசக்தி கதை – வசனபுத்தகங்கள் இருக்கும் என்றும் நினைவுகூர்ந்தார்.

சினிமாவில் கருணாநிதியின் வசனம் அனல்பறக்கும் என்றும் சமூகத்தை சிந்தித்து செயலாற்ற வைக்கும் என்றும் ஓ.பி.எஸ். புகழாரம் சூட்டினார்.

கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை அழகுற பேசிய முதலமைச்சர் பேசிய உரை, மணிமண்டபத்தில் இடம்பெறவேண்டும் என்று ஓ.பி.எஸ். கோரிக்கை விடுத்தார்.