கருணாநிதி பிறந்தநாள் – முதலமைச்சர் மலர் தூவி மரியாதை

231

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, சென்னை ஓமந்தூராரில் அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்திலும், முதலமைச்சர் மற்றும் திமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழா தமிழக அரசு சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையொட்டி, சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவு மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, ஆவடி நாசர், சாமிநாதன், திமுக எம்.பி டி.ஆர்.பாலு, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னதாக அண்ணா பல்கலைக்கழக மாணவர்களால் உருவாக்கப்பட்ட டிரோன் மூலம் கருணாநிதி சிலைக்கு மலர்தூவும் நிகழ்ச்சியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து, சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர், கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னதாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், உள்ள கருணாநிதியின் சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின், அங்கிருந்து புறப்பட்டு கோபாலபுரம் இல்லம் சென்றார்.

அங்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

அப்போது அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், குடும்ப உறுப்பினர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.