இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக நியமனம்

398

இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா உள்ளிட்ட 4 பேர் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கும், முக்கிய பங்காற்றியவர்களுக்கும் மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பு வழங்கப்படும். நாடாளுமன்றத்தில் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார்கள்.

அந்தவகையில், தற்போது இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா ஆகியோருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று கர்நாடகாவை சேர்ந்த Veerendra Heggade, ஆந்திராவை சேர்ந்த Vijayendra Prasad ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அரை நூற்றாண்டுகளாக தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக பணியாற்றி வரும் இளையராஜா ஆயிரம் திரைப்படங்களுக்கு மேலாக இசையமைத்துள்ளார். அவர் ஐந்து முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார்.

79 வயதாகும் இளையராஜாவை மத்திய அரசு 2010-ம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தது. அதன் பின் 2018-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. சட்டமேதை அண்ணல் அம்பேத்கரையும், பிரதமர் நரேந்திர மோடியையும் ஒப்பிட்டு ‘அம்பேத்கர் அன்ட் மோடி’ என்ற தலைப்பில் வெளியான நூலுக்கு இளையராஜா எழுதிய முன்னுரை பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. அப்போதே இளையராஜாவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாக பேசப்பட்டது குறிப்பிடத்தகக்து.

மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டு இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா ஆகிய இருவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இளையராஜாவின் படைப்பு மேன்மை தலைமுறைகளைக் கடந்து மக்களை மகிழ்வித்திருக்கிறது என்றும்  மனித உணர்வுகளை இசையின் வாயிலாக அழகுற பிரதிபலித்தவர் இளையராஜா எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதே அளவுக்கு இளையராஜாவின் வாழ்க்கைப் பயணமும் ஊக்கமளிக்கக்கூடியது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இளையராஜா ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து வளர்ந்து நிறைய சாதித்துள்ளார் என்றும் அவர் ராஜ்ய சபாவுக்கு வருவதில் மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.