அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகள் யார்? இப்ப என்ன செய்கிறார்கள் தெரியுமா?

67
Advertisement

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய 5 உச்சநீதிமன்ற நீதிபதிகள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. யார் அந்த ஐந்து நீதிபதிகள், அவர்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

ராமர் கோயிலானது சட்டப்படி கட்டப்பட்டுள்ளதாக பேசிய பிரதமர் மோடி, அயோத்தி தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்தது அரசியல் வட்டாரங்களில் விவாதப்பொருளானது. அது மட்டுமில்லாமல் குறிப்பிட்ட ஐந்து நீதிபதிகளுக்கும் கோயில் திறப்பு விழாவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டதும் பேசுபொருளாக மாறியது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில், அந்த இடம் இந்துக்களுக்கே சொந்தம் என 2019ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பு வழங்கிய அந்த நீதிபதிகள் அமர்வில் பங்குபெற்றிருந்த நான்கு நீதிபதிகள் ஓய்வு பெற்று வெவ்வேறு பொறுப்புகளில் பதவி வகித்து வருகின்றனர். தீர்ப்பு வழங்கிய சமயத்தில் அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் ரஞ்சன் கோகோய். ஓய்வு பெற்ற பிறகு அவர் தற்போது ராஜ்ய சபா உறுப்பினராக உள்ளார்.

மற்றுமொரு நீதிபதியான ஷரத் அரவிந்த் போப்டே, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகி, 2021ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு மகாராஷ்டிரா தேசிய சட்டப் பல்கலைக்கழக வேந்தராக பதவி வகித்து வருகிறார்.

அதே போல, 2021ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற அசோக் பூஷன், தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அயோத்தி தீர்ப்பு அமர்வில் அரசியல் சாசனப்படி இடம்பெற்றிருந்த அப்துல் நசீர், ஆந்திர பிரதேச ஆளுநராக இருக்கும் நிலையில், அதேபோல அமர்வில் ஒரு அங்கமாக இருந்த சந்திரசூட் தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ளார்.

இந்தியாவின் ஐம்பதாவது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான சந்திரசூட் வரும் நவம்பர் மாதம் வரையில் அந்தப் பணியில் தொடர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.