மாநாட்டிற்கு பிறகு அதிரடியாக மாறும் திமுக! உதயநிதியின் வேற லெவல் வியூகம்

114
Advertisement

மழை, வெள்ளப் பேரிடர் கால விமர்சனங்கள், பொங்கல் பரிசு சர்ச்சைகள் என அனைத்தையும் தாண்டி, ஒரு பக்கம் கேலோ இந்தியா போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில், முழு வீச்சில் தேர்தல் களத்தில் வேகம் எடுத்துள்ளது திமுக.

உதயநிதி துணை முதல்வராகிறாரா என்ற கேள்வியும் விவாதமும் அரசியல் வட்டாரங்களில் ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ள நேரத்தில், பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ள சேலம் மாநாட்டிற்கு பின் உதயநிதியின் அரசியல் ஆளுமை மேலும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை. மாணவர் அணியும் இளைஞர் அணியும் திமுக கட்சியின் மிகபெரிய பலமாக அமைந்துள்ளது. அடுத்த தலைமுறையினருக்கான அரசியல் வியூகங்கள் மற்றும் 2024 தேர்தலை சந்திக்க தேவையான முக்கிய யுக்திகளை கையிலெடுக்கும் வகையிலேயே மாநாடு அமைந்துள்ளது. மொழிப்போர் தியாகிகளின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்ட நிலையில், மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி வாசித்துள்ளார்.

கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றுவது, மாநிலத்தில் உள்ள மத்திய வேலை வாய்ப்புகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிப்பது, நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சேலத்துக்கும் திராவிட இயக்கத்துக்கும் உள்ள தொடர்பு ஒன்றும் புதிதல்ல. முதலில் நீதிக் கட்சியாக இருந்து பின்னர் அமைந்த திராவிடர் கழகம் 1944ஆம் ஆண்டு சேலத்தில் தான் உருவானது. அவ்வாறாக நடந்த முதல் மாநாட்டில்தான்  திராவிடர் கழகம் என்ற பெயரை தீர்மானமாக கொண்டு வந்தார் அண்ணா.

தற்போதும் சேலம், பெத்தநாயக்கன் பாளையத்தில் நடந்து முடிந்துள்ள திமுக இளைஞரணி மாநாடு பல்வேறு அரசியல் பரிமாணங்களில் முக்கியத்துவம் பெறுகிறது. 1968இல் இளைஞர் திமுகவாக தொடங்கிய அணி தான் 1980இல் இளைஞரணியாக தொடங்கப்பட்டது.  கருணாநிதி தொடங்கிய இந்த இளைஞரணிக்கு  1982ஆம் ஆண்டு தற்போதைய முதல்வரான முக ஸ்டாலின் மாநில அமைப்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இப்படியாக பயணித்து வந்த இளைஞரணியின் செயலாளராக  2019ஆம் ஆண்டு உதயநிதி பொறுப்பேற்றார். உதயநிதி பொறுப்பேற்றதும் முப்பது லட்சம் இளைஞர்களை புதிய உறுப்பினர்களாக சேர்ந்து புதிய வலுப்பெற்றது இளைஞரணி. முன்பெல்லாம் பெரியார், அண்ணாதுரை மற்றும் கருணாநிதி அவர்களது புகைப்படங்கள் பதாகைகளை ஆக்கிரமித்து வந்த நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவுக்கு பின், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதியின் புகைப்படங்களே முக்கியத்துவம் பெற்று வருவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டி காட்டுகின்றனர்.

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும் மாநாட்டு ஒருங்கிணைப்பாளருமான கே.என்.நேரு தலைமையில் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ஆர்.ராஜேந்திரன், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி, சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் திமுக இளைஞரணியின் பிரம்மாண்ட மாநாட்டை சாத்தியமாக்கி உள்ளனர். ஜனவரி 21ஆம் தேதி நடந்த இந்த மாநாட்டிற்கான உழைப்பும் திட்டமிடலும் மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கியுள்ளது.

மாநாட்டு பந்தல் 9 லட்சம் சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், உணவுக்கூடம் சுமார் 4 லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. 270 இன்ஸ்பெக்டர்கள், 500 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 8500 போலீசார் உள்ளிட்டோர் மாநாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தன்னுடைய சமூகவலைதள பக்கங்களில் முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்தது போலவே, 2024 தேர்தல் பணிக்கான சிறப்பான தொடக்கமாக இளைஞரணி மாநாடு அமைந்திருப்பதாக கூறும் அரசியல் நோக்கர்கள், திமுகவில் அடுத்தடுத்த மாற்றங்களை விரைவில் எதிர்ப்பார்க்கலாம் எனவும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் செயல்பாட்டில் உதயநிதி முக்கிய பங்களிப்பை அளிப்பார் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.