ஆணியே புடுங்காத  SC, ST ஆணையம்… என்ன செய்கிறார் ஸ்டாலின்?

146
Advertisement

மக்களின் வரிப்பணத்தில் தமிழ்நாடு அரசால் பலகோடிகளை செலவழித்து ஆரம்பிக்கப்பட்ட ஆணையம்தான் தமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி. ஆணையம். ஆனால், தமிழ்நாடிலுள்ள பட்டியலின மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டு அவர்களுக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

சென்னை அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு LLA Building- ன் இரண்டாவது தளத்தில்தான் உள்ளது தமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி ஆணையம். ஆனால், சமீபத்தில் நடந்த தஞ்சாவூர் ஆணவப்படுகொலைக்கு நேரில் சென்றுகூட விசாரிக்கல்லை, பல்லாவரம் எம்.எல்.ஏ. கருணாநிதி மகன், மருமகள் மீதான வன்கொடுமைப்புகாரையும் கண்டுகொள்ளவில்லை, தமிழ்நாட்டையே நடு நடுங்க வைத்த சாதிவெறி கொடூர தாக்குதலுக்கே வேறு வழியில்லாமல் தாமதமாகத்தான் சென்றார்கள். வேங்கைவயலுக்கு போகவே இல்லை, வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே ஆணையத்தில் அரசுப்பதவி வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டின் கடைகோடி கிராமத்திலிருந்து புகார் கொடுக்கவரும் பட்டியலின ஏழை மக்களை, கோர்ட்டுக்கு போயி பார்த்துக்கோங்க என விரட்டும் அவலம் என பல்வேறு குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கிறது தமிழ்நாடு எஸ்.சி.,எஸ்.டி. ஆணையம். ஆணையத்தில் நடக்கும் அவலங்கள் குறித்து அங்கு ஏற்கனவே பணிபுரிந்த சசிகலா என்கிற அலுவலக உதவியாளர் பெண்மணி சொன்ன தகவல்கள் நம்மை திடுக்கிட வைக்கின்றன.

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து சென்னையிலுள்ள தமிழ்நாடு SC, ST ஆணையத்துக்கு புகார் கொடுக்க வந்த வயதான தம்பதியரின் நிலை இன்னும் பரிதாபமானது. “என் பேரு சண்முகய்யா, வயசு 72 ஆகுதுங்க. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பக்கத்துல பிரம்மதேசம்ங்குற கிராமத்திலிருந்து வர்றோம்ங்க. நாங்க கொத்தடிமைங்குறதால 2014 ல் அரசாங்கம் எங்களுக்கு இடம் ஒதுக்கினது. ஆனா, அந்த இடத்தை அதிகாரிங்க வேண்டப்பட்டவங்களுக்கு மாற்றி ஒதுக்கிட்டாங்க. அப்புறம், போராடி வேற இடம் மாற்றிக்கொடுத்தாங்க. அந்த இடத்தையும் ஆக்கிரமிப்பு பன்றாங்க. நாங்க பட்டியலின சமூகம்ங்குறதால பல போராட்டங்களுக்குப்பிறகு, ஆணையத்துல புகார் கொடுத்தோம். ஆறு மாசத்துக்கப்புறம் கூப்பிட்டிருந்தாங்க, வந்தோம். ஊர்ல எல்லோர்க்கிட்டேயும் கையெழுத்து வாங்கிட்டு வரச்சொன்னதால அதன்படி திரும்பவும் வந்தோம். ஆனா, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றவர்களிடம், இரண்டு முறை வந்தீர்களே? பேருந்து கட்டணம் ஏதாவது ஆணையத்தில் கொடுத்தார்களா? என்று நாம் கேட்டபோது, “கொடுக்கலைங்க, அப்படி ஒண்ணு இருக்கிறதே எங்களுக்கு தெரியாதுங்க. அவங்களும் சொல்லல” என்றார்கள், பரிதாபமாக.

இதுகுறித்து, நாம் மேலும் விசாரித்தபோதுதான் ஆணையத்தின் செயல்பாடுகளை வேதனையோடு விவரிக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தது 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதுதான் எஸ்.சி., எஸ்.டி. கமிஷன் எனப்படும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம். 2021 அக்டோபர் மாதம் ஆணைய தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி சிவக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார். 2022 ஜனவரி உறுப்பினர்கள் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்கள். ஆணையத்தலைவர் சிவக்குமாருக்கு தற்போது சம்பளம் மட்டுமே 41/2 லட்சரூபாய். துணைத்தலைவர் புனிதப்பாண்டியனுக்கு சம்பளம் 2 ¼ லட்ச ரூபாய். மீதமுள்ள 6 உறுப்பினர்களுக்கும் தலா 1 ½ லட்ச ரூபாய் சம்பளம். கார், பங்களா என சீனியர் ஐ.ஏ.எஸ்களுக்கான பல வசதிகள் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 4,000 க்குமேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. பல புகார்களுக்கு இன்னும் யாரையும் விசாரணைக்கே அழைக்கவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. மேலும் 350 க்குமெற்பட்ட புகார்கள் டிஸ்மிஸ் ஆகியும்கூட அதை புகார்தாரர்களுக்கு கடிதம் அனுப்பி தெருவிக்கப்படவில்லை. புகார் கொடுப்பவர்கள் பெரும்பாலும் ஏழ்மை நிலையில் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையிலிருந்து வருவதால் அவர்களுக்கு பேருந்து கட்டணச் செலவுகளை ஆணையமே வழங்கவேண்டும். அப்படி பயணக்கட்டணம் கொடுப்பதுமில்லை. அதுகுறித்து, புகார்தாரர்களுக்கு தெரிவிப்பதும் இல்லை.

இந்த ஆணையம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகிறது. ஆனால், திருவண்ணாமலை வீரளூர் சாதிய வன்கொடுமை தாக்குதல், ஈரோடு பகுதியில் கோழி திருடியதாக கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் உள்ளிட்டவற்றுக்குத்தான் நேரில் சென்றிருக்கிறார்கள். தமிழகத்தையே அதிரவைத்த வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்துக்கூட நேரில் சென்று விசாரணை செய்யவில்லை. பட்டியலின பள்ளி மாணவரையும் அவரது தங்கையையும் ஆதிக்கச் சாதி மாணவர்கள் மிகக் கொடூரமாக கத்தியால் வெட்டிச் சாய்த்த, தமிழகத்தையே உலுக்கிய நாங்குநேரி சாதிய சம்பவத்துக்குக்கூட நான்கு நாட்கள் கழித்துதான் சென்றுள்ளார் ஆணைய உறுப்பினர் ரகுபதி. அதுவும் அந்த கொடூரம் நிகழ்ந்த பகுதியைச்சேர்ந்தவர் என்பதால் வேறு வழியில்லாமல் வந்துள்ளார். அதற்குள், முன்னாள் நீதியரசர் சந்துரு தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்துவிட்டது தமிழ்நாடு அரசு. தினம் தினம் நடக்கும் சாதிய வன்கொடுமை சம்பவங்கள் குறித்து பெரும்பாலும் சூமோட்டோவாக எடுத்து விசாரிப்பதில்லை. இதுவரை பதிவாளர் நியமனம் செய்யப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஆணையம் எங்கு செயல்படுகிறது என்பதே பலருக்கு தெரியாது. அதற்கான முகவரியை தெரிந்துகொள்ளவோ, தொடர்புகொண்டு புகார்களை அளிப்பதற்கான வழிமுறையை தெரிந்துகொள்ளவோ, ஆணையத்தின் செயல்பாடுகளை அறிந்துகொள்ளவோ ஒரு வெப்சைட்கூட ஆரம்பிக்கப்படவில்லை என்பதுதான் அவலத்திலும் அவலம்.

பேருதான் இதற்கு தமிழ்நாடு எஸ்.சி., எஸ்டி. ஆணையம். ஆனால், எந்த வித அறிவிப்பும் கொடுக்காமல் அவுட்சோர்ஸிங் முறையில் 19 தற்காலிக பணியாளர்களை நியமித்துள்ளார்கள். ஆனால், பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரைக்கூட நியமிக்கவில்லை என்ற பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், துறை உயரதிகாரிகள் தங்களது உறவினர்கள், வேண்டப்பட்டவர்களை மட்டுமே நியமித்துள்ளார்கள். முறையான பயிற்சியோ அனுபவமோ இல்லாத இவர்கள் வைத்ததுதான் சட்டம்.

இதுகுறித்து, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைய துணைத்தலைவர் புனிதபாண்டியனோ, “ எல்லா சம்பவங்களுக்கு நேரில்தான் போகவேண்டும் என்ற அவசியமில்லை. வேங்கைவயல் சம்பத்திற்கு நேரில் போகவில்லை என்றாலும் விசாரணைக்கு எடுத்திருக்கிறோம். அதேபோல், நாங்குநேரி சம்பவத்தை தமிழ்நாடு அரசு விசாரணை கமிஷன் அமைத்ததால் நாங்கள் மேற்படி எதுவும் விசாரிக்கவில்லை. சூமோட்டாவாக வழக்குகளை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். எதை எடுக்கவேண்டும் என்பதை ஆணையம்தான் முடிவு செய்யும்” என்றார் விளக்கமாக.

ஏற்கனவே, போலீஸ் ஸ்டேஷன், கலெக்டர் ஆஃபிஸ் என பல இடங்களுக்கு அலைந்து, திரிந்து நடவடிக்கை எடுக்கப்படாமல்தான் சென்னையிலுள்ள தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தை நோக்கி ஏதோ ஒரு கிராமத்திலுருந்து வருகிறார்கள். அப்படியிருந்தும் அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கோர்ட்டுக்கு போகச்சொன்னால் ஆணையம் எதற்கு?