கட்சிகளை ஒதுக்கி தள்ளி சுயேச்சைகளின் கோட்டையான சாயல்குடி பேரூராட்சி!

281
Advertisement

தமிழ்நாடே பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. கடம்பூர் பேரூராட்சி தவிர்த்து 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12,601 பதவிகளுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. பெரும்பாலான இடங்களில் திமுக கூட்டணியே முன்னிலையில் இருக்கிறது.

ஆனால் சாயல்குடி பேரூராட்சி அதற்கு விதிவிலக்காக அமைந்துள்ளது. 15 வார்டுகளிலும் சுயேச்சைகளை வெற்றிபெற்றுள்ளார்கள். உள்ளாட்சி அமைப்புகளில் சுயேச்சைகள் என்பவர்கள் அணிகலன் போன்றவர்கள். அதனை சாயல்குடி பேரூராட்சி மக்கள் உருவாக்கி தந்துள்ளனர். திமுக, அதிமுக, பாஜக, நாதக, பாமக, அமமுக, மநீம என பல முனை போட்டி நிலவியபோதிலும் 15 வார்டுகளும் சுயேச்சைகளின் வசமாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டு, சாயல்குடி, முதுகுளத்தூர், கமுதி, அபிராமம், மண்டபம், ஆர்எஸ்மங்கலம் என மொத்தம் 7 பேரூராட்சிகள் உள்ளன.

மற்ற பேரூராட்சிகளில் திமுக கூட்டணி முன்னிலை பெற்ற போதிலும், சாயல்குடியில் சுயேச்சைகள் தான் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். இந்த பேரூராட்சியில் சுயேச்சைகள் அனைவரும் ஒன்றிணைந்து தலைவர், துணை தலைவரை தேர்வு செய்ய உள்ளனர். மேலும் அரசியல் கட்சி சாராத நபர்கள் பேரூராட்சியை நிர்வகிக்க உள்ளனர். இதன்மூலம் சாயல்குடி பேரூராட்சி சுயேச்சைகளின் கோட்டையாகியுள்ளது. இதேபோன்று ஒருசில இடங்களில் திமுகவுக்கு அடுத்த இடத்தில் சுயேச்சைகளின் கைகள் சற்று ஓங்கியே உள்ளன.