மோடியுடன் அமெரிக்க தொழிலதிபர்கள் சந்திப்பு

349
Advertisement

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோரை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.


குவாட் மற்றும் ஐ.நா. மாநாடுகளில் பங்கேற்க அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு, வாஷிங்டன்னில் உள்ள ஆண்ட்ரூஸ் விமான தளத்தில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அமெரிக்காவின் குவால்காம், அடோப், உள்ளிட்ட முன்னணி தொழில் அதிபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு தனித்தனியாக நடைபெற்றது. டிஜிட்டல் இந்தியா மற்றும் சுகாதாரம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகிய துறைகளில் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களை பயன்படுத்துவது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
அதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்பு உறவு, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு குறித்து அவர்கள் விவாதித்தனர். கொரோனா சூழல், பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்தும், வர்த்தகம், பாதுகாப்பில், இருதரப்பு ஒத்துழைப்பு குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், மோடி – மோரிசன் பேச்சுவார்த்தையில், இந்திய – ஆஸ்திரேலிய உறவு குறித்தும், இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார மற்றும் மக்கள் தொடர்பு குறித்தும் விவாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, அமெரிக்க துணை அதிபரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிசை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்தார். அப்போது, இருவரும் உலகளாவிய மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து, கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். இருதரப்பு உறவு, வளர்ந்து வரும் மற்றும் முக்கியமான தொழில்நுட்பங்கள், சுகாதாரம், கல்வி குறித்து விவாதித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸை தேர்வு செய்தது முக்கியமான மற்றும் வரலாற்று நிகழ்வு என்று தெரிவித்தார். கமலா ஹாரிஸ் உத்வேகத்தின் ஆதரமாக இருப்பதாக மோடி பாராட்டு தெரிவித்தார். கொரோனா 2வது அலை பாதிப்பின் போது, அமெரிக்கா, இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டியதற்காக பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். இந்தியாவும் அமெரிக்காவும் இயற்கையான கூட்டாளிகள் என்றும் இருநாடுகளும் ஒரே மாதிரியான மதிப்புகள் மற்றும் புவிசார் அரசியல் நலன்களைப் பகிர்ந்து கொள்வதாக குறிப்பிட்டார். கமலா ஹாரிசை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி, இந்திய மக்கள் உங்களை வரவேற்க காத்திருப்பதாக தெரிவித்தார். பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் கூட்டறிக்கைக்குப் பிறகு வெள்ளை மாளிகை வளாகத்தில் உரையாடினர்.

இரு நாடுகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பும் ஒத்துழைப்பும் அதிகரித்து வருவதாகவும், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான துடிப்பான மற்றும் வலுவான மக்கள் தொடர்பு இரு நாடுகளுக்கும் இடையே பாலமாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று அமெரிக்கா அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். ஜோ பைடன் அமெரிக்கா அதிபராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. இந்த சந்திப்பின் போது, இருதரப்பு உறவு, பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் ஆப்கானிஸ்தான் விவகாரம், தென் சீன கடல் பிரச்சனை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் இருவரும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.