2050-இல் உலகில் பாதிபேருக்கு இது நடக்கும்

333
Advertisement

கொரோனாவின் வருகைக்கு பின்னர் ஸ்மார்ட்போனின் பயன்பாடு அதிகரித்து விட்டது. பள்ளி,கல்லூரிகள் திறக்கப்படாததால் மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் வழியாக கல்வி கற்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டனர். இதனால் பெரியவர்களுக்கு இணையான எண்ணிக்கையில் குழந்தைகளும் ஸ்மார்ட் போனை பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.

கொரோனாவிற்கு முன்னர் விளையாட்டுகளுக்காக மட்டும் ஸ்மார்ட்போனை பயன்படுத்திய சிறுவர்கள் இன்றைய சூழலில் கல்வித்தேவைக்காகவும் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பள்ளிக் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன் என்பது தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது.

இந்த நிலையில் ஸ்மார்ட்போன் திரையை நீண்ட நேரம் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்து தொடர்பான ஆய்வு முடிவுகள் ‘The Lancet Digital Health’ இதழில் வெளிவந்துள்ளது.

சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, சீனா, இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர்கள் ஸ்மார்ட் போன், கணினி போன்ற சாதனங்களின் திரையை நீண்ட நேரம் பார்ப்பது குறித்தும் மயோபியா எனப்படும் கிட்டப்பார்வை குறித்தும் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் 3 மாத குழந்தை முதல் 33 வயது இளைஞர்கள் வரை ஈடுபடுத்தப்பட்டனர்.

ஆய்வின் முடிவில் ஸ்மார்ட் போன் திரையை நீண்ட நேரம் பார்ப்பதால் மயோபியா எனப்படும் கிட்டப்பார்வை ஏற்படுவதற்கான ஆபத்து 30 சதவீதம் இருப்பதாகவும் ஸ்மார்ட் போனுடன் கணினி திரையையும் நீண்ட நேரம் பார்த்தால் மயோபியா ஏற்படுவதற்கான ஆபத்து 80 சதவீதம் இருப்பதாகவும் தெரியவந்தது.

மேலும், 2050 ஆம் ஆண்டு உலக மக்கள்தொகையில் பாதி பேர் மயோபியாவை எதிர்கொள்ள நேரிடும் என இங்கிலாந்தில் உள்ள ஆங்கிலியா ரஸ்கின் பல்கலைக்கழகத்தின்  கண் மருத்துவப் பேராசிரியர் போர்னே கணித்துள்ளார்.

 ஸ்மார்ட் போனில் அதிக நேரம் செலவிடும் இளைய தலைமுறையினர் இந்த ஆய்வு முடிவை எச்சரிக்கையாக கருதி தேவையான நேரங்களில் மட்டும் ஸ்மார்ட் போனை பயன்படுத்தினால் ஆபத்தை தவிர்க்கலாம்.