ரஷ்யப் படைகளின் தாக்குதலை முறியடிக்க, ‘ஆயுதம் ஏந்துவதற்குத் தயாராக இருக்கும் எவரும் நாட்டின் பாதுகாப்புப் படையில் சேரலாம்’ என்று தனது குடிமக்களை உக்ரைன் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதனை ஏற்று போரிடுவதற்கு தாமாக முன்வந்த பலருக்கும் உக்ரைன் அரசு ஆயுதங்கள் வழங்கி வருகிறது.
திருமணமான தம்பதிகள் தொடங்கி வயதான முதியோர் வரை உக்ரைன் ராணுவத்தினருடன் கைகோர்த்து தீரத்துடன் போரிட்டு வருகின்றனர்.ஆண்கள் மட்டுமல்லாது பெண்களும் நாட்டைக் காக்க களமிறங்கியுள்ளனர். அரசியல்வாதிகள், ஆசிரியர்கள், துறை நிபுணர்கள், அழகிப் பட்டம் வென்றவர்கள், விளையாட்டு வீராங்கனைகள் எனப் பல்வேறு துறைகளில் உள்ள பெண்கள் பாதுகாப்புப் படையில் இணைந்துள்ளனர். ஆண்களுக்கு நிகராக பெண்களும் குழுக்களாக ஆயுதங்களை ஏந்தி தீரத்துடன் கண்காணித்து வரும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து உக்ரைன் எம்.பி. கிரா ருடிக் கூறுகையில், ”உக்ரைனில் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் ஆயுதங்களை கொண்டு ரஷ்ய படைகளுக்கு எதிராக போராட தயாராக இருக்கிறோம். நம் ஆண்களைப் போலவே பெண்களும் நம் மண்ணைக் காப்பார்கள்” என அவர் தெரிவித்துள்ளார் ..