சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து, வாட்ஸ்-அப் பயனாளர்களுக்கு அழைப்பு விடுத்து சர்வதேச அளவில் மோசடியில் ஈடுபடும் நிகழ்வு அதிகரித்துள்ளது.
இந்த அழைப்புகளில் பெரும்பாலானவை +251 (எத்தியோப்பியா), +60 (மலேசியா), +62 (இந்தோனேசியா), +254 (கென்யா) மற்றும் +84 (வியட்நாம்) என்று தொடங்கும் தொலைபேசி எண்களில் இருந்து வருகின்றன. அவை நாட்டின் குறியீடுகளைக் கொண்டிருந்தாலும், வாட்ஸ்அப் அழைப்புகள் இணையம் வழியாகச் செய்யப்படுவதால், உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் அழைப்புகளைச் செய்யலாம் மற்றும் பல்வேறு நகரங்களில் வாட்ஸ்அப் அழைப்புகளுக்கு சர்வதேச எண்களை விற்கும் ஏஜென்சிகள் உள்ளன.
இதுகுறித்து வாட்ஸ்-அப் நிறுவனத்திடம் மத்திய அரசு விளக்கம் கேட்டிருந்த நிலையில், மெட்டா மற்றும் வாட்ஸ்-அப் நிறுவனத்திற்கு, பயனாளர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு உறுதி செய்வதே முக்கிய நோக்கம் என்று தெரிவித்துள்ளது. பயனாளர் பாதுகாப்பு குறித்து கல்வி மற்றும் எச்சரிக்கை உணர்வை தொடர்ச்சியாக கட்டமைத்து வருவதாகவும், இதன் மூலம் தவறான நோக்கங்கள் கொண்ட நபர்களை பயனாளர்கள் எளிதில் கண்டறிய முடியும் என தெரிவித்துள்ளது.
தங்களின் புதிய திட்டத்தின்படி, தொலைபேசி அழைப்பு விகிதம் 50 சதவீதம் வரை குறையும் என்று தெரிவித்துள்ள வாட்ஸ்-அப் நிறுவனம், தற்போதுள்ள மோசடி அழைப்புகளை தங்களால் கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளது.