வைரலாகும் மஞ்சள் பை புரோட்டா

393
Advertisement

தற்போது பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக விழிப்புணர்வு ஏற்படுத்த புரோட்டா பயன்பட்டுள்ளது. அந்த வகையில் மஞ்சள் பை புரோட்டா வைரலாகி வருகிறது.

தமிழகத்தைப் பொருத்தவரைக் காலங்காலமாக மஞ்சள் பை புழக்கத்தில் இருந்து வந்தது. எங்கு சென்றாலும் துணியாலான மஞ்சள் பையில் தேவையான பொருட்களை எடுத்துச்செல்வது வழக்கமாக இருந்துவந்தது. ஆனால், பிளாஸ்டிக் பைகள் வந்த பிறகு, மஞ்சள் பைகள் காணாமல் போய்விட்டன.

பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறியும் பிளாஸ்டிக் பைகள் மட்கும் தன்மையற்று இருப்பதால், மண்ணில் மலட்டுத் தன்மை ஏற்படுவதோடு, கால்நடைகளும் பிளாஸ்டிக் பைகளைத் தின்று அவதிக்குள்ளாகி வருகின்றன.

இந்த நிலையில், பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக மீண்டும் மஞ்சள் பையைப் புழக்கத்திற்கு கொண்டுவர 2021 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு மஞ்சள் பை இயக்கத்தைத் தொடங்கியது. அதற்கு வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், மதுரை ஆரப்பாளையம் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் மஞ்சள் பை புரோட்டா தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

தங்கள் ஹோட்டலுக்கு உணவு வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவமாக மஞ்சள் பை வழங்கி ஊக்கப்படுத்தி வரும் அந்த ஹோட்டல் நிர்வாகம், மஞ்சள் நிறப் பை வடிவிலான புரோட்டாவையும் தயாரித்து அசத்தியுள்ளது.

ஒரு மஞ்சள் பை புரோட்டாவை 20 ரூபாய். அந்த மஞ்சப்பை புரோட்டாவில் மீண்டும் மஞ்சள் பை என்னும் வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு மதுரையில் முகக் கவச வடிவில் புரோட்டா தயாரிக்கப்பட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது. அந்த வகையில் தற்போது மஞ்சள் நிறப் பை வடிவப் புரோட்டாவுக்கும் வாடிக்கையாளர்கள் அமோக ஆதரவு அளித்து வருகின்றனர்.

மஞ்சள் புரோட்டா உண்பதால் வயிறும் மனதும் நிறைகிறது என்கின்றனர் வாடிக்கையாளர்கள்.