ஜெருசலேமில் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய அதிபர் புதினுக்கு உக்ரைன் அதிபர் அழைப்பு

382
Advertisement

உக்ரைன் மீது ரஷ்யா இன்று 17-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்யா படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. அதேவேளை, தென்கிழக்கு நகரமான மரியுபோல் நகரிலும் ரஷ்யா வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு உக்ரைன் தரப்பும் பதிலடி கொடுத்து வருகிறது. ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆயுதம் மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகிறது. ரஷ்யா – உக்ரைன் இடையே நடத்து வரும் போரில் இரு தரப்பிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்றன. இந்த முயற்சிகளின் பலனாக உக்ரைனின் சில பகுதிகளில் தற்காலிகமாக சண்டையை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ஆனாலும், பெரும்பாலான உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர இரு நாடுகளின் உயர் அதிகாரிகள் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்து வருகின்றன.

இந்நிலையில், நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என ரஷ்யா அதிபர் புதினுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என ஜெலன்ஸ்கி புதினுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், இந்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் பிரதமர் நஃபதலி பென்னெட்டை மத்தியஸ்தம் செய்ய ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.