பனிமூடிய நகருக்குள் சென்ற சுற்றுலா ரயிலின் வீடியோ ஆன்லைனில் பரபரப்பாகியுள்ளது.
குளிர்காலம் வந்தாலே அனைவரும் நடுங்கத் தொடங்கிவிடுவோம். வீட்டுக்குள் இரவு நேரத்தில் ஃபேன் ஓட்டத்தை நிறுத்திவிடுவோம். ஜன்னல்களையும் மூடிவைத்திருப்போம். பேருந்து, ரயில் பயணங்களின்போதும் அவற்றின் ஜன்னல்களை மூடிவிடுவோம்.
இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் மட்டுமன்றி, பிப்ரவரி மாதங்களிலும் கடுங்குளிர் நிலவும். மழைபொழிவதுபோல் பனியும் கடுமையாகப் பொழிந்து மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளைப் பனிப்போர்வையால் மூடிவிடும்.
என்றாலும், பனிப்பொழிவு கடுமையாக இருக்கும் சிம்லா பகுதியில், பனிப்பொழிவுக்கு மத்தியில் ரயிலில் பயணிக்கும் சுற்றுலா பிரபலமாகி வருகிறது. பிரபலமாகி வரும் இந்தச் சுற்றுலாவுக்கென்று ஆயிரக்கணக்கானோர் இங்கு வருகின்றனர். பனிமூடிய பகுதியில் ரயிலில் பயணிப்பது ஜில்லென்ற அனுபவத்தையும் உற்சாகத்தைதயம் தருவதாகக் கூறுகிறார்கள் அந்த சுற்றுலா வாசிகள்.
இந்தச் சூழலில், பாரம்பரிய ரயில் பாதை பொறியியல் சாதனைக்காகப் புகழ்பெற்ற கல்கா- சிம்லா நகரங்களுக்கிடையேயான உலகப் பாரம்பரிய தளப் பாதையில் சிம்லா ரயில் நிலையம் அருகே பனிக்குவியல்களுக்கு மத்தியில் ரயில் அழகாக நகர்ந்துகொண்டிருக்கும் வீடியோ இணையதளவாசிகளை மெய்சிலிர்க்கச் செய்துள்ளது.