ஆசை ஆசையாய் முட்டைத் தோசை சாப்பிட்டவர் உயிரிழந்த பரிதாபம் தோசைப் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான தோசை அயல்நாடுகளிலும் அமோகமாக விற்பனையாகி வருகிறது. அயல்நாட்டினர் சாமானியராக இருந்தாலும், விவிஐபியாக இருந்தாலும் இந்தியாவுக்கு வரும்போது விரும்பிச் சாப்பிடுவது தோசையைத்தான். அந்த அளவுக்கு அனைவரையும் சுண்டியிழுக்கும் சுவைகொண்டது தோசை.
தோசை சாப்பிடாதவர்களே இல்லையென்னும் அளவுக்கு உணவுலகில் கொடிகட்டிப் பறக்கிறது தோசை. ஆனால், முட்டைத் தோசை சாப்பிட்டு, தொண்டையில் சிக்கியதால் முதன்முறையாக ஒருவர் உயிரிழந்த சம்பவம் தோசைப்பிரியர்களின் மனதில் கிலியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியிலுள்ள நெட்டப்பாக்கத்தை அடுத்த மடுகரை எஸ்ஆர்பி நகரில் வசித்துவந்தவர் முருகன். 53 வயதான கூலித்தொழிலாளியான முருகனுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாகக் கூறப்பட்டது. அதேசமயம், நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த நோயால் அவதிப்பட்டு வந்த அவர் அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டும் வந்திருக்கிறார்.
இந்த நிலையில், கடந்த ஜனவரி 12 ஆம் தேதி மாலை நேரத்தில் தனது வீட்டில் முட்டைத் தோசை சாப்பிட்டுக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது முட்டைத் தோசை தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவரை, கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரிக்குக் கொண்டுசென்றனர். ஆனால், வரும்வழியிலேயே முருகன் இறந்துவிட்டதாக அவரது உடலைப் பரிசோதித்த டாக்டர்கள் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக, மடுக்கரைப் புறநகர் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த அதிர்ச்சி சம்பவம் முட்டைத் தோசைப் பிரியர்களை யோசிக்க வைத்துள்ளது.