இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங்
டோனி கறுப்புக் கோழி வளர்க்கத் தொடங்கியுள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஜாபுவா உள்ளிட்ட சில மாவட்டங்களில்
கடக்நாத் என்னும் கறுப்பு நிறக் கோழிகள் அதிக எண்ணிக்கையில்
வளர்க்கப்பட்டு வருகின்றன. அதிகப் புரதச் சத்து நிறைந்துள்ள இந்த
கடக்நாக் கோழிகளுக்கு புவிசார் குறியீடும் பெறப்பட்டுள்ளது.
சாதாரணக் கோழியின் முட்டை, இறைச்சியைவிட கறுப்புக் கோழிகளின்
முட்டையும் இறைச்சியும் விலை அதிகம்.
இந்த இனக் கோழிகள் அந்த மாநிலத்தில் பழங்குடி மக்களால் பெருமளவில்
வளர்க்கப்படுகின்றன. அந்த மக்களின் வாழ்வாதாரமே கறுப்புக் கோழி வளர்ப்பு
தான். அதிக நுகர்வு காரணமாக கடக்நாத் இனக் கோழிகள் அழிவின் விளிம்பில்
இருந்தன.
இந்த நிலையை மாற்ற விரும்பிய மத்தியப்பிரதேச மாநில அரசு கோழி வளர்ப்புத்
திட்டத்தைக் கொண்டுவந்தது.
மிகவும் அரிதான இந்தக் கோழிகளை ஆன்லைனில் பதிவுசெய்வோருக்கு விற்பனை
செய்யும் திட்டத்தை மத்தியப்பிரதேச மாநில அரசு 2018 ஆம் ஆண்டில் கொண்டுவந்தது.
இந்தத் திட்டம் பற்றிக் கேள்விப்பட்ட இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள்
கேப்டன் உடனே ஆன்லைனில் பதிவுசெய்திருந்தார்.
அவருக்கு ஜாபுவா மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கம்மூலம் தற்போது 2,000
ஆயிரம் கடக்நாத் கோழிக் குஞ்சுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஜார்க்கண்ட்
மாநிலம், ராஞ்சி நகரில் வசித்துவரும் டோனி அவற்றைப் பெற்றுக்கொண்டு தனது
பண்ணையில் கோழி வளர்ப்பில் தனது கவனத்தை செலுத்தியுள்ளார்.
நீண்டகாலத்துக்கு முன்பே கடக்நாத் கோழிக்குஞ்சுகளுக்கு ஆர்டர்செய்திருந்தார்
டோனி. ஆனால், பறவைக் காய்ச்சல் காரணமாக உடனடியாக அவற்றை அனுப்பி
வைக்க முடியாத சூழல் நிலவியது.
கடக்நாத் கோழிக் குஞ்சு ஒன்றின் விலை 75 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை
விற்பனை செய்யப்படுகிறது.