தள்ளாத வயதிலும் மனைவியை காப்பாற்ற பனைமரம் ஏறி உழைக்கும் முதியவர்

453

நெல்லை அருகே தள்ளாத வயதிலும் மன உறுதியுடன், தனது மனைவியை காப்பாற்ற பனைமரம் ஏறி உழைத்து வாழும் முதியவரின் அன்பு, அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள காரியாண்டி கிராமத்தை சேர்ந்தவர் துரைப்பாண்டி. தற்போது 90 வயதை கடந்த துரைப்பாண்டி, தனது மனைவி வேலம்மாளுடன் வசித்து வருகிறார்.

தனது இளமை காலத்தில் பிள்ளைகளுக்காக உழைத்த, துரைப்பாண்டி – வேலம்மாள் தம்பதியை, அவர்களது பிள்ளைகள் கவனிக்காமல், நிர்கதியாக விட்டுள்ளனர்.

முதுமை காலத்தில் வறுமையின் காரணமாக அன்பு மனைவிக்காக மீண்டும் பனை ஏறும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

உழைப்புக்கு வயது தடை இல்லை என்பதை உணர்த்தும் வகையில், தள்ளாத வயதிலும் மன உறுதியுடன் மனைவியை காப்பாற்ற பனைமரம் ஏறி உழைத்து வருகிறார் துரைப்பாண்டி.

தற்போது வரை யாரிடமும் கையேந்தாமல் பனைமரம் ஏறி பதநீர் எடுத்தும், நொங்கு வெட்டியும் தனது பொருளாதார தேவையை  பூர்த்தி செய்து வருகிறார்.

தினமும் அதிகாலை எழுந்து கையில் அரிவாளுடன் பனை ஏற செல்லும் துரைப்பாண்டி, இன்றைய இளம் தலைமுறையினருக்கு சாவல்விடும் வகையில், சர்வ சாதரணமாக பனைமரம் ஏறுவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளைமை காலத்தில் நாள் ஒன்றுக்கு 30 மரம் ஏறும் அளவுக்கு உடல் ஒத்துழைத்ததாக தெரிவித்த துரைப்பாண்டி, தற்போது முதுமை காரணமாக பத்துக்கும் குறைவான மரங்ஙளில் மட்டும் ஏற முடிவதாக தெரிவித்தார்.

இதற்கிடையே, பனைத்தொழில் செய்து வரும் 90 வயது முதியவர் துரைப்பாண்டியனின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவரது மனைவிக்கும் முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு வழங்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து,  திசையன்விளை வட்டாட்சியர் செல்வக்குமார் மற்றும் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் பத்மபிரியா ஆகியோர் முதியவர் துரைப்பாண்டியனின் மனைவியிடம் முதியார் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையை வழங்கினர்.

மிகச்சிறிய வருமானமாக இருந்தாலும் அன்பு மனைவியுடன் ஆனந்தமாக வாழ்ந்து வரும் துரைப்பாண்டியின் வாழ்க்கை, உழைத்து வாழ வேண்டும் என்ற உள்ளம் கொண்ட அனைவருக்கும் ஒரு பாடம் என்றால் அது மிகையாகாது.