தன்னைப் பிறக்க அனுமதித்த மருத்துவர்மீது வழக்குத் தொடர்ந்த பெண்

413
Advertisement

இங்கிலாந்தைச் சேர்ந்த ஈவி டூம்ப்ஸ் என்னும் 20 வயது பெண், தன்னைப் பிறக்க அனுமதித்தற்காகத் தனது தாயின் மருத்துவர் மீது வழக்குத் தொடர்ந்து நஷ்டஈடு பெற்றுள்ளார்.

ஈவி டூம்ப்ஸ் ஸ்பைனா ஃபிப்டா என்னும் மருத்துவக் குறைபாட்டுடன் பிறந்தார். அவரது முதுகெலும்பு மற்றும் கருப்பை சரிவர வளராமல் போயிற்று. அதன்காரணமாக, அவரது முதுகெலும்பில் இடைவெளி ஏற்பட்டு அவதியுறத் தொடங்கினார். நாள்முழுவதும் குழாய்களுடன் இணைக்கப்பட்டே நடமாட வேண்டியிருந்தது. மேலும், குடல், சிறுநீர்ப் பிரச்சினைகளால் அவதிப்படத் தொடங்கினார்.

இந்த நிலையில், தனது தாய் கரோலின் கர்ப்பிணியாக இருந்தபோது அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் பிலிப் மிட்செல்மீது லண்டன் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில், கர்ப்பம் தரிக்கும்முன் எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கிய சப்ளிமென்ட்ஸ் பற்றித் தனது தாய்க்கு டாக்டர் சரியாக எடுத்துரைக்கவில்லை என்று கூறியிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, மருத்துவருக்கு எதிராகத் தீர்ப்பளித்தார்.

அந்தத் தீர்ப்பில், கருத்தரிப்பதற்குமுன் ஃபோலிக் அமிலத்தை எடுத்துக்கொள்ள மருத்துவர் தனது நோயாளிக்கு அறிவுறுத்தவில்லை. அறிவுறுத்தி அந்த மருந்துகளை உட்கொண்டிருந்தால், குறைபாடு இல்லாமல் ஈவி டூம்ப்ஸ் பிறந்திருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து மருத்துவர் ஒரு பெரிய தொகையை ஈவி டூம்ப்ஸ்க்கு நஷ்ட ஈடாக வழங்கியுள்ளார்.

சமூக ஊடகத்தில் இந்த விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.