விவாகரத்தை பார்ட்டி வைத்து கொண்டாடிய பெண்

203
Advertisement

இங்கிலாந்தில் வசித்து வரும் இந்திய பெண், அவருடைய கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றதை விருந்து வைத்து கொண்டாடியுள்ளார்.

இந்தியாவை பூர்விகமாக கொண்டவர் சோனியா குப்தா. 45 வயதாகும் இவர் லண்டனில் வசித்து வருகிறார். சோனியாவுக்கு கடந்த 2003 ஆம் ஆண்டு இந்தியாவில் திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் கணவருடன் இங்கிலாந்தில் குடியேறினார்.
ஆனால் மணவாழ்க்கை அவர் எதிர்பார்த்தபடி அமையவில்லை. இதனிடையே இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன.

மனம் ஏற்றுக்கொள்ளாத கணவருடன் வாழ்ந்து வந்த சோனியா, ஒரு கட்டத்தில் விவாகரத்து செய்வதுதான் சிறந்தது என முடிவெடுத்தார். சோனியாவின் இந்த முடிவை பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், அவரது மகன்களும் நண்பர்களும் சோனியாவின் முடிவை ஆதரித்தனர்.

இதனையடுத்து, தனியார் அமைப்பு ஒன்றின் உதவியுடன் கடந்த 2018 ஆம் ஆண்டு விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். கடந்த 3 ஆண்டுகளாக பலகட்ட விசாரணை நடைபெற்றது.

நீண்ட போராட்டத்திற்கு பின்னர் அண்மையில் சோனியாவுக்கு விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. விவாகரத்துக்கு கிடைத்ததை தொடர்ந்து, தன்னுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறது என பெற்றோருக்கு உணர்த்த விரும்பினார் சோனியா.

இதற்காக ஒரு விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து தன்னுடைய உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்தார். அத்துடன், விருந்துக்கு வருபவர்கள் அனைவரும் மகிழ்ச்சியின் அடையாளமாக வண்ணமயமான ஆடைகளுடன் வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பின்னர் ஏற்கனவே திட்டமிட்டபடி ஒரு திருமண விழாவைப் போன்று விருந்து நிகழ்ச்சியை நடத்தினார். இதில், சோனியாவும் வண்ணமயமான ஆடை அணிந்துகொண்டார். அதுமட்டுமின்றி, “இறுதியாக விவாகரத்தாகிவிட்டது” என்று எழுதப்பட்ட ரிப்பனை ஆடையில் இணைத்துக் கொண்டார்.

கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றதை விருந்து வைத்து கொண்டாடிய நிகழ்வு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.