ஓய்வுபெற்ற ஆசிரியை 1 கோடி ரூபாய் நன்கொடை அளித்து அநேகம்பேர் அழியாச் செல்வம்பெற வழிவகுத்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்திலுள்ள பஹுயாட்டி பகுதியில் வசித்துவருபவர் சித்ரலேகா மாலிக். கொல்கத்தாவில் ஆசிரியராகப் பணிபுரிந்து பணிநிறைவு பெற்றுவிட்ட இவருக்குத் தற்போது 80 வயதாகிறது. இதுவரையிலும் சுமார் 1 கோடி ரூபாய் நன்கொடை வழங்கிப் பலரின் வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ளார்.
தற்போது சுமார் 350 சதுர அடி வீட்டில் வசித்துவருகிறார். பள்ளி ஆசிரியருக்கு மகளாகப் பிறந்த சித்ரலேகாவுக்கு அவரது தந்தையின் அறிவுரையே வேதவாக்கானது. மற்றவர்களுக்குக் கொடுத்துப் பழகுங்கள். நீங்கள் மகிழ்ச்சியாகவும் திருப்தியுடனும் இருப்பீர்கள் என்று தந்தை அடிக்கடி கூறிவந்த கருத்தை மனதில் பதியவைத்துக்கொண்டார் சித்ரலேகா.
அதைத் தொடர்ந்து சிறுவயதிலிருந்தே தனது தேவைகளைக் குறைத்துக்கொண்டு, சக மாணவர்களுக்கு உதவத் தொடங்கினார். அதில் கிடைத்த ஆனந்தம் சித்ரலேகாவைத் தொடர்ந்து உதவத் தூண்டியது. பின்னர், ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளார்.
ஆசிரியர் பணியில் சேர்ந்தபிறகு நன்றாகப் பயிலும் ஏழை மாணவ மாணவிகளுக்கு உதவி வந்துள்ளார். அந்தச் சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதால், திருமணம் பற்றியே சிந்திக்காமல் இருந்துவிட்டார். பணி ஓய்வின்போது கிடைத்த 31 லட்ச ரூபாயைத் தன் பெற்றோர் நினைவாக, ஒருங்கிணைந்த தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு வழங்கிவிட்டார்.
கல்வி, தொண்டு நிறுவனங்களுக்கு கடந்த 19 ஆண்டுகளாக உதவி வரும் சித்ரலேகா எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். எங்கு சென்றாலும் நடந்தே செல்கிறார். தவிர்க்க முடியாத பட்சத்தில் பேருந்தில் பயணிக்கிறார். ஓய்வூதியமாகத் தற்போது மாதம் 50 ஆயிரம் ரூபாய் பெற்றுவரும் சித்ரலேகா, அதனையும் மிச்சப்படுத்தி, நன்கொடை வழங்கி தொடர் வள்ளலாக உயர்ந்து நிற்கிறார்.
முறையான கல்வி எல்லாரையும் மாற்றும். பொறுப்புள்ள ஆசிரியரால் எதையும் மாற்றமுடியும் என்கிறார் சித்ரலேகா மாலிக்