பெரும் எதிர்ப்பார்க்கு மத்தியில் மார்ச் 18-ம் தேதி தாக்கலாகும் தமிழக பட்ஜெட்

224
Advertisement

தமிழகத்தில் தி.மு.க.அரசு பொறுப்பேற்ற பின், கடந்த ஆண்டு திருத்திய வரவு செலவு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன் முதல் முறையாக வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப் பட்டது. இந்த ஆண்டு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் கேட்கப்பட்டு, அவற்றின் அடிப்படையில், சில நாட்களாக பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு வருகிறது.

பட்ஜெட்டில் வருவாயை பெருக்க, சில பிரிவினர்களுக்கு வரி விதிப்பது; தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் புதிய திட்டங்களை அறிவித்து, அவற்றுக்கு நிதி ஒதுக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, ‘வரும் 18-ம் தேதி காலை 10:00 மணிக்கு சட்டசபை கூட உள்ளது. அன்று நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார்.

கடந்த ஆண்டை போல, காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதன்பின் அலுவல் ஆய்வு கூட்டம் கூடி, எத்தனை நாட்கள் பட்ஜெட் மீது விவாதம் நடத்துவது என முடிவு செய்து, சட்டசபை நடக்க வேண்டிய தேதிகளை அறிவிக்கும். மேலும், 2022 – 23ம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கை, 2021 – 22ம் ஆண்டுக்கான துணை நிதி நிலை அறிக்கை, 24ம் தேதி நிதி அமைச்சரால் சட்டசபையில் தாக்கல் செய்யப்படும். வேளாண் பட்ஜெட் தேதி, துறை ரீதியான மானிய கோரிக்கை தேதி ஆகியவற்றை, அலுவல் ஆய்வு கூட்டம் முடிவு செய்யும்.


பட்ஜெட் தாக்கல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். கேள்வி நேரமும் ஒளிபரப்பப்படும். அரசின் கொள்கை முடிவின்படி, அனைத்து நிகழ்வுகளையும் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும். சில தொழில்நுட்ப பிரச்னைகள் உள்ளன. அவற்றை கண்காணித்து, சரியான நிலை வந்த பின், சட்டசபை நிகழ்வுகள் முழுமையாக ஒளிபரப்பப்படும். சட்டசபை கூட்டத் தொடரில், கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்படும்’ என்றும் தெரிவித்துள்ளார்.