கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டு வருபவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

237

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக வலைதளங்களை தீவிரமாக கண்காணித்து வரும் போலீசார், வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டு வருபவர்களை கைது செய்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறை தொடர்பாக இதுவரை 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக வலைதளங்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதன்படி, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கலவரம் தொடர்பாக வாட்ஸ்-அப் குழுவில், எச்சரிக்கை செய்தி பரவிய நிலையில், அதுதொடர்பாக திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாட்ஸ்-அப் குரூப்பின் அட்மின் அளித்த புகாரில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே கள்ளக்குறிச்சி மாணவிக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட புதுக்கோட்டை மாவட்டத்தில் வாட்ஸ்-அப் குழுக்களில் செய்திகள் பரவியுள்ளது. இதுதொடர்பாக, ஆலங்குடி மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பகுதிகளை சேர்ந்த குரூப் அட்மின்கள் 8 பேர் உட்பட 60 நபர்களை, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் 25க்கும் மேற்பட்ட வாகனங்களில் தனித்தனியாக கிராம பகுதிகளில் சென்று விசாரணைக்காக அழைத்து சென்றனர்.