திடீரென்று மறைந்துபோன சிறுமி

276
Advertisement

திடீரென்று காணாமல்போன 4 வயது சிறுமி, படிக்கட்டுக்கு அடியில் 3 ஆண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டு உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் வைரலாகியுள்ளது.

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் வசித்துவருபவர்கள் கிம்பர்லி கூப்பர்- கிர்க் ஷுல்டிஷ் தம்பதியினர். இவர்களின் 4 வயது செல்ல மகள் பைஸ்லீ 2019 ஆம் ஆண்டு, ஜுலை மாதத்தில் காணாமல் போய்விட்டாள். 3 ஆண்டாகத் தேடியும் சிறுமி எங்கே இருக்கிறாள் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், காகெர்டீஸ் நகரிலுள்ள ஒரு வீட்டில் சிறுமி மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. உடனே, அங்கு விரைந்துசென்ற போலீசார் அந்த வீட்டை சோதனை செய்தனர். அந்த வீட்டு உரிமையாளரோ சிறுமி பற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்று மறுத்தார்.

ஒரு மணி நேரமாக அந்த வீட்டில் தேடியும் சிறுமி தென்படவில்லை.
அப்போது வீட்டின் அடித்தளத்துக்குச் செல்லும் படிக்கட்டுகள் விசித்திரமாக இருப்பதைப் புலனாய்வு அதிகாரி பார்த்துள்ளார்.

அந்தப் படிக்கட்டுகளை அகற்றிப் பார்த்தபோது அங்கு சிறுமி பைஸ்லீ மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டார். உடனடியாக, சிறுமி மீட்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். தற்போது சிறுமி நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதேசமயம்., சிறுமியின் பெற்றோரைக் கைதுசெய்துள்ளனர் போலீசார். சிறுமியைப் பாதுகாக்கத் தவறியதாகவும், சிறுமியின் நலனுக்கு எதிராக செயல்பட்டதாகவும் கூறி பைஸ்லீன் வளர்ப்புப் பெற்றோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.