முதலையைக் கண்டு அஞ்சாமல் தனது செருப்பைக் காட்டி விரட்டிய வீரப் பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ட்டுவிட்டரில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், ஆற்றின் கரையில் ஒரு பெண் தனது செல்லப்பிராணியுடன் நிற்கிறார். ஆற்றில் வெள்ளம் ஓடிக்கொண்டிருக்க எதிர்நீச்சல் அடித்தபடி முதலை ஒன்று கரையை நோக்கி வருகிறது.
முதலை வருவதைக் கண்ட ஆற்றிலுள்ள நீர் வாழ் உயிரினங்கள் தப்பி துள்ளி ஓடுகின்றன. ஆனால், கரையை முதலை நெருங்கிவிட்டபோதும் அதைக்கண்டு துளியும் பயப்படாமல் தைரியமாக அங்கே நிற்கிறார் அந்தப் பெண்மணி.
பிறகு, சட்டென்று தனது வலது கால் செருப்பைக் கழற்றி முதலையை நோக்கி ஓடிப்போய்விடு என்பதுபோல ஆவேசமாகக் காண்பிக்கிறார். முதலையும் வந்த வேகத்தில் ஆற்றுக்குள் திரும்பிப் போய்விடுகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த வலைத்தளவாசிகள் அந்தப் பெண்ணை அஞ்சா நெஞ்சம் கொண்ட தைரியப் பெண் என்று பாராட்டி வருகின்றனர்.