ஆறு வயதில் 3 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள வீட்டை சொந்தமாக வாங்கி உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் ஒரு சிறுமி.
எலி வளையானாலும் தனி வளை என்பார்கள். ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு என்பது வாழ்நாள் லட்சியங்களுள் ஒன்று. கூலி வேலை செய்வோராக இருந்தாலும், மாதச் சம்பளத்துக்கு வேலை செய்வோராக இருந்தாலும், வேறெந்த பணிபுரிந்தாலும் சொந்த வீடு என்பது பேரானந்தத்தைத் தரும்.
அந்தக் கனவு எந்த வயதில் நிறைவேறும் என உறுதியாகக் கூறமுடியாவிட்டாலும், வேலை கிடைத்தவுடனேயே சொந்த வீடு வாங்குவது அல்லது கட்டுவது பற்றி சிந்திக்கத் தொடங்கிவிடுவார்கள். அதனால்தான், அந்த சொந்த வீடு கனவை நிறைவேற்றிக்கொள்ள வங்கிகள் முதல் தனியார் நிதிநிறுவனங்கள் வரை வீட்டுக்கடனை வாரிவாரி வழங்குகின்றன.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 6 வயது சிறுமி தனது சொந்த வீட்டுக்கனவை சுலபமாக நிறைவேற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
மெல்போர்ன் நகரில் சொத்து முதலீடு ஆலோசகராக இருப்பவர் கேம் மெக்லெலன். இவருக்கு ரூபி, லூஸி என இரண்டு மகள்களும், கஸ் என்னும் மகனும் உள்ளனர். மூத்த மகளான 6 வயது ரூபி தன் தந்தைகொடுத்த பணத்தை சேமித்தும், தந்தையின் பணிக்கு உதவியபோது அவர் அளித்த பணத்தையும் சிறுகச் சிறுக சேமித்து இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.
தென்கிழக்கு மெல்போர்னில் கிளைட் புறநகரில் அமைந்துள்ள பாதியளவு கட்டப்பட்டுள்ள வீடு மற்றும் நிலத்தை 6 லட்சத்து 71 ஆயிரம் டாலர் தொகைக்கு வாங்கியுள்ளார். இன்னும் 10 ஆண்டுகளில் இந்த மதிப்பு இரட்டிப்பாகும் என்றும் அச்சிறுமி கணித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் ரியல்எஸ்டேட் துறை அசுர வளர்ச்சியடைந்துள்ள நிலையில், எப்படி சொந்த வீடு வாங்குவது எனப் பலப் பெற்றோர் தயங்கிநிற்கும் நிலையில், 6 வயதிலேயே சொந்தப் பணத்தில் சொந்த வீடு வாங்கிய சிறுமி ரூபி மெக்லெலன் முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.
உலகிலேயே இளம்வயதில் சொந்த வீடு வாங்கிய பெருமைக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் ரூபி.