நெடுஞ்சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து வாழைப்பழத்தைப் பிடுங்கித் தின்ற யானையின் வீடியோ வலைத்தளவாசிகளைப் பெரிதும் கவர்ந்து வருகிறது.
இலங்கையில் 3 ஆண்டுகளுக்குமுன் நடைபெற்ற இந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.
அந்நாட்டின் கடரங்கமா என்னும் இடத்திலுள்ள நெடுஞ்சாலைப் பகுதியில் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது சாலையின் நடுவே யானை ஒன்று வழியை மறித்தபடி நின்றுகொண்டிருந்தது. இதனால் பேருந்தை நிறுத்தினார் டிரைவர். அதேசமயம் பேருந்துக்குள் வாழைப்பழம் இருந்ததை மோப்ப சக்தியால் தெரிந்துகொண்டது.
மிகுந்த பசியோடு இருந்த அந்த யானை, டிரைவர் சீட் அருகேயுள்ள ஜன்னல் வழியாகத் தும்பிக்கையை நீட்டி டிரைவரின் கழுத்தை வருடியவாறு வாழைப்பழத்தைத் துளாவத் தொடங்கியது.
யானையின் இந்த அதிரடிச் செயலால் பேருந்துப் பயணிகள் சிலர் பயத்தில் அலறத் தொடங்க, வேறுசில பயணிகளோ யானையின் பசியைப் புரிந்துகொண்டு பேருந்தினுள் இருந்த வாழைப்பழத்தைக் கொடுக்கத் தொடங்கினர். அதனை மிகுந்த மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்ட யானை ஆர்வத்தோடு உண்ணத் தொடங்கியது.
பேருந்துக்குள் வேறுசில உணவுப்பொருட்கள் இருந்தாலும் அவற்றை எடுக்காமல், வாழைப்பழங்களை மட்டுமே எடுத்துக்கொண்டதும், பயணிகளைத் தொந்தரவு செய்யாமல் தன் உணவை மட்டுமே தேடி எடுத்ததும் பயணிகளை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.
வாழைப்பழங்களை உண்ட மகிழ்ச்சியில் யானை அந்த பேருந்தைவிட்டு அகல, பேருந்தோ விரைந்துசென்றது.