சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக மதுரை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

119
Advertisement

கடந்த அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் சித்தரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

இந்த இரட்டை கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். தனக்கு ஜாமீன் வழங்கும் பட்சத்தில் நீதிமன்றம் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படுவேன் என்று மனுவில் கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணையில், சிபிஐ தரப்பில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலீஸ் என்பதால் சாட்சிகளை கலைக்க பல வழிகளை கையாளுவார்கள் என்றும் பல சாட்சிகள் காவல்துறை சார்ந்து இருப்பதால் மிரட்டப்பட்டு கலைக்கப்படுவார்கள், எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என  வாதம் முன்வைக்கப்பட்டது.

தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையானது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது என்றும் இன்னும் 6 சாட்சிகளை மட்டுமே விசாரணை செய்ய வேண்டியுள்ளதாக தெரிவித்த சிபிஐ, குற்றச்சாட்டப்பட்டவர்கள் வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் செயல்படுகின்றனர் என்று புகார் தெரிவித்தது.

இதனால் ஒரு சாட்சியை விசாரிப்பதற்கு ஏறக்குறைய ஓன்றரை மாதம் அவதாகவும் சிபிஐ விளக்கமளித்தது. சிபிஐ வாதங்களை தொடர்ந்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனுக்கு மீதான விசாரணையை ஏப்ரல் 24ம் தேதிக்கு நீதிபதி இளங்கோவன் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.