தாய் சடலத்துடன் 4 நாள் தூங்கி பள்ளிக்குச்
சென்றுவந்த சிறுவன், சோறு சமைத்து தாய்க்கு ஊட்டிய
சோக சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
அதிர்ச்சியான இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது.
திருப்பதி பேரூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வித்யா நகர் குடியிருப்புப்
பகுதியில் ராஜலட்சுமி என்ற பெண் தனது 10 வயது மகன் ஷாம்
கிஷோருடன் வசித்துவந்தார்.
கணவரைப் பிரிந்துவிட்ட இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியையாகப்
பணிபுரிந்து வந்தார்.
சிறிது மனநலம் பாதிக்கப்பட்ட ஷாம் கிஷோர் 6 ஆம் வகுப்பு
பயின்றுவருகிறான்.
ராஜலட்சுமி மார்ச் மாதம் 8 ஆம் தேதி வீட்டில் கால் தவறி விழுந்து
கீழே விழுந்ததில், தலையில் அடிபட்டு இறந்துள்ளார். இதனை
அறியாக ஷாம் கிஷோர் தனது தாய் ஓய்வெடுப்பதாகக் கருதி,
அவர் கற்றுக்கொடுத்தபடி சாப்பாடு சமைத்துள்ளான். பிறகு,
அதைத் தனது தாய்க்கு ஊட்டமுயன்றுள்ளான்.
தாய் சாப்பிடாததால், அவரது சடலத்தின் அருகிலேயே படுத்து
உறங்கியுள்ளான். காலையில் எழுந்ததும் வழக்கம்போல பள்ளிக்குச்
சென்றுவந்துள்ளான். அவனது உடம்பில் துர்நாற்றம் வருவதைக்
கவனித்த பள்ளி நிர்வாகம் வீட்டுக்கு அழைத்து வந்து பார்த்தது.
அங்கு சிறுவனின் தாய் இறந்துகிடப்பதைப் பார்த்து பள்ளி
நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்து ராஜலட்சுமியின் சகோதரருக்கு
போன்செய்து தகவல் தெரிவித்துள்ளனர்.
அவர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அங்குவந்த
காவல்துறையினர் ராஜலட்சுமியின் சடலத்தைக் கைப்பற்றிப்
பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.
4 நாட்களாகத் தாயின் சடலத்துடன் உறங்கி பள்ளிக்குச் சென்று
வந்ததும், தாய் சொல்லிக்கொடுத்தபடி சோறு சமைத்து தாய்க்கு
ஊட்டமுயன்றதும் அப்பகுதி மக்களிடம் பாசத்தையும் சோகத்தையும்
அதிர்ச்சியையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது.