விமானம் மூலம் தன்னந்தனியாக உலகை வலம்வந்த முதல்பெண் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் 19 வயதுப் பெண்.
பெல்ஜியத்தைச் சேர்ந்த ஜாரா என்னும் இளம்பெண் 155 நாட்களில் 32 நாடுகள், ஐந்து கண்டங்களில் 52 ஆயிரம் கிலோ மீட்டர் சுற்றிவந்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்டு 18 ஆம் தேதி, 2 இருக்கைகள் கொண்ட ஷார்க் ஏரோ விமானத்தில் உலகை வலம்வரும் பயணத்தைத் தொடங்கினார். இது மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும். உலகில் மிக அதிவேகமாகப் பறக்கும் இலகுவான விமானங்களுள் இதுவும் ஒன்றாகும்.
முதலில் இங்கிலாந்து, அயர்லாந்து, அமெரிக்கா, ரஷ்யா நாடுகளுக்குச் சென்றார். பின்னர், தென்கிழக்கு ஆசியா, வடஇந்தியா, எகிப்து நாடுகள் வழியாகப் பயணித்து மீண்டும் ஐரோப்பாவுக்குச் சென்றார்.
இதற்கிடையே கடந்த மாதம் கோயம்புத்தூருக்கு வருகை தந்து, தனக்குப் பொருளாதார உதவிசெய்த தொழிலதிபருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தற்போது பெல்ஜியத்துக்குச் சென்றுள்ள சாரா எலக்ட்ரிக்கல் எஞ்ஜினீயரிங் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கத் திட்டமிட்டுள்ளார். பிற்காலத்தில் விண்வெளி வீராங்கனையாகவும் விருப்பம் கொண்டுள்ளார்.
ஜாரா குழந்தையாக இருந்தபோதே அவளது பெற்றோர் விமானத்தில் அழைத்துச்செல்லத் தொடங்கிவிட்டனர். 14 வயதில் விமானத்தை இயக்கக் கற்றுக்கொண்ட ஜாரா, உலகை சுற்றிவர வேண்டும் என்று கனவு கண்டாள். அந்தக் கனவை தற்போது நனவாக மாற்றியுள்ளதுடன், மகத்தான சாதனையும் புரிந்திருக்கிறார்.
ஜாராவின் பெற்றோர் விமானிகள் என்பது குறிப்பிடத்தக்கது.