12 மணி நேரம் வேலை செய்யும் தொழிற்சாலைகள் திருத்த சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு, எதிர்க்கட்சிகள் மற்றும் தி.மு.க கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

86
Advertisement

2023ம் ஆண்டு தொழிற்சாலைகள் திருத்த சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் கொண்டு வந்தார்.

தினசரி 12 மணி நேரம் என வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுப்பு என்ற முறையை இச்சட்டம் சொல்கிறது. இந்த திருத்த சட்டத்தை கண்டித்து திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிக, இடதுசாரி கட்சிகள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.

இதன் பின்னர் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வழிவகை செய்யும் சட்டத் திருத்தத்தின் கீழ் தொழிலாளர்கள் விருப்பம் இருந்தால் மட்டும்தான் ஒரு நிறுவனத்தால் வேலை நேரத்தை உயர்த்த முடியும் என்று தெரிவித்தார்.

இந்த சட்ட திருத்தத்தால், தொழிலாளர் நலனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தால், தமிழக அரசு மறு ஆய்வு செய்த பிறகே, சட்டத்தை நடைமுறைப்படுத்தும் என்றும் அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார். இதனையடுத்து சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.