உக்ரைனிலிருந்து  இந்தியா வர மறுத்த  மாணவி

309
Advertisement

ரஷ்ய  மக்கள்  உள்பட உலகம் முழுவதும் திரண்டு போர் வேண்டாம் என்ற ஒருமித்தக் குரலை ஒலிக்கச் செய்து வருகின்றனர். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களும், உக்ரைனில் சிக்கித் தவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, மத்திய, மாநில அரசின் உதவியுடன் பல்வேறு மாணவ மாணவிகள் மற்றும் இந்திய மக்கள் பலர், மீண்டும் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

இச்சூழலில், இந்திய மாணவர்கள் பலர் நாடு திரும்பி வரும் நிலையில், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த  17 வயதான மாணவி ஒருவர் நாடு திரும்ப மறுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவில் இளங்கலை மருத்துவப் படிப்பு பயின்று வரும் அந்த மாணவி, போர் நடப்பதற்கு முன்னதாக விடுதியில் தங்கி வந்துள்ளார். போர் தொடங்கியப் பின் விடுதி மூடப்பட்டதால், அந்த மாணவி வாடகைக்கு வீடு தேடி அலைந்துள்ளார். அப்போது உக்ரேனியர் ஒருவர் அந்த மாணவியை தனது வீட்டில் தங்கிக் கொள்ளும்படி அனுமதித்துள்ளார். இந்த நிலையில் ரஷ்யப் படையினரின் தாக்குதலை முறியடிக்க கீவ் நகர வாசிகள் பலரும் அரசிடம் இருந்து ஆயுதம் பெற்று இராணுவத்தினருடன் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் அந்த மாணவிக்கு அடைக்கலம் தந்த நபரும் நாட்டைக் காக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்தி, போருக்கு சென்று விட்டதால் அவரின் மனைவி மற்றும் 3 குழந்தைகள் தனித்து விடப்பட்டுள்ள நிலையில் அந்த உக்ரேனியப் பெண் மற்றும் அவரின் குழந்தைகளுக்கு துணையாகவும், அவர்களை உடனிருந்து கவனித்துக்கொள்ளும் பொருட்டும், ஹரியானா மாணவி இந்தியாவிற்கு திரும்ப மனமில்லாமல் அவர்களுடனேயே இருந்து வருகிறார். போர் முடியும் வரை உக்ரைன் நாட்டிலேயே தங்கியிருந்து அந்த குடும்பத்தினரை பார்த்துக்கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார் அந்த மாணவியின் தாய் தனது மகளிடம் உடனே நாடு திரும்பி விடுமாறு எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் வரமறுத்து பிடிவாதமாக அங்கேயே இருக்கிறார். மாணவி.