30 ஆண்டுகளாகக் கழிப்பறையில் சமோசா தயாரிக்கப்பட்ட
செயல் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
அந்த உணவகம் உடனடியாக அதிகாரிகளால் மூடப்பட்டுவிட்டது.
சௌதி அரேபியாவில்தான் இந்த அதிர்ச்சியான செயல்
அரங்கேறியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சௌதி அரேபியாவில் ஜித்தா நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில்
ஓர் உணவகம் 30 ஆண்டுகளுக்கும்மேலாக இயங்கிவந்தது. இந்த
உணவகத்தில் தயார்செய்யப்படும் உணவுகளின் தரம் குறித்து
அங்குள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் வந்தது.
அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த உணவகத்துக்கு
நேரில்சென்று ஆய்வுசெய்தனர். அத்துடன் உணவகம் இயங்கிவந்த
கட்டடத்தையும் ஆய்வுசெய்தனர்.
அப்போது உணவகத்தில் ஊழியர்கள் சுகாதார அட்டை இன்றி
பணியாற்றுவதையும், உணவகம் குடியிருப்பு சட்டங்களை மீறி
செயல்படுவதையும் கண்டுபிடித்தனர்.. அத்துடன் 2 ஆண்டுகளுக்கு
முன்பே செய்யப்பட்ட உணவுகள் விற்பனைக்கு அனுப்புவதற்கு
வைக்கப்பட்டிருந்ததும் பூச்சிகளும் கொறித்துண்ணிகளும் அந்த
உணவகத்துக்குள் உலா வந்ததையும் சுகாதார அதிகாரிகள் கண்டதாக
வளைகுடா செய்திகள் தெரிவிக்கின்றன.
கெட்டுப்போன இறைச்சி, காலாவதியான பாலடைக்கட்டி
போன்றவற்றைப் பயன்படுத்தி உணவு வகைகள் தயாரிக்கப்
பட்டிருப்பதையும் அந்த அதிகாரிகள் உறுதிசெய்தனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக சமோசாவும் பிற தின்பண்டங்களும்
30 ஆண்டுகளாகக் கழிப்பறையில் வைத்து தயார்செய்யப்பட்டு
வருவதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர் ஆய்வுக்குச்
சென்ற நகராட்சி சுகாதார அதிகாரிகள்.
உடனடியாக அந்த உணவகத்தை மூட உத்தரவிட்டனர் அதிகாரிகள்.
இதனால்தான் சில உணவகங்கள் வாடிக்கையாளர்கள் கண்முன்னே
கண்ணாடிக்கூண்டுக்குள் வைத்து உணவைத் தயார்செய்கின்றனவோ?