எரியும் கட்டடத்திலிருந்து சிறுமியைக் காப்பாற்றிய ரஷ்ய இளைஞர்கள்

401
Advertisement

தீப்பற்றி எரியும் 9 மாடிக் கட்டடத்திலிருந்து ஒரு சிறுமியை இரண்டு இளைஞர்கள் காப்பாற்றும் துணிகரச் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள டோரோஷ்யா தெருவில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் அண்மையில் திடீரென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது. மளமளவென்று பரவத் தொடங்கிய தீ குடியிருப்பின் 9 ஆவது மாடி முழுவதும் பரவியது. இதனால், 9 ஆவது மாடி முழுவதும் புகை மண்டலமாக மாறியது.

என்றாலும் அதிலிருந்த 12பேர் எவ்விதப் பாதிப்பு இன்றியும் 3 பேர் காயங்களுடனும் மீட்கப்பட்டனர். ஆனால், ஒரேயொரு சிறுமி மட்டும் மாட்டிக்கொண்டாள். அந்தச் சிறுமி ஜன்னல் வழியாக வெளியேறித் தப்பிக்க முயன்றாள். அப்போது 8 ஆவது மாடியிலிருந்த 2 இளைஞர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து சிறுமியைக் காப்பாற்றி தாங்கள் இருந்த இடத்துக்குக் கொண்டுவந்துவிட்டனர்.

தீயணைப்புத்துறையினரும் மீட்புத் துறையினரும் வரும் முன்னரே, தங்கள் உயிரைப் பற்றி சிறிதளவும் கவலைப்படாமல், தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முயலாமல் சிறுமியைக் காப்பாற்றிய அந்த இளைஞர்களின் செயலை உலகம் முழுவதும் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

எங்கோ தொலைவில் இருக்கும் உறவினர்களைவிட, அண்டை வீட்டிலிருப்போரே நமது உண்மையான உறவினர்கள் என்பதை ரஷ்ய இளைஞர்களின் செயல் நிரூபித்துள்ளது.