நோயாளியின் உடலில் இருந்து 156 சிறுநீரகக் கற்கள் அகற்றம்

410
Advertisement

ஒரே நோயாளியின் உடலில் இருந்து 156 சிறுநீரகக் கற்களை அகற்றிய மருத்துவர்களின் சாதனை சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளது.

கர்நாடகாவில் உள்ள ஹுப்ளி பகுதியைச் சேர்ந்த 50 வயதாகும் பள்ளி ஆசிரியர் ஒருவர் திடீரென்று கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். உடனடியாக ஹைதராபாத் நகரிலுள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுநீரகத்தில் ஏராளமான பெரிய கற்கள் கொத்து கொத்தாக இருப்பதைக் கண்டறிந்தனர்.

மேலும், சிறுநீரகம் வழக்கமான இடத்தில் இருப்பதற்குப் பதிலாக வயிற்றின் அருகே இருப்பதையும் கண்டனர்.

சில கற்கள் சிறுநீரகத்தில் இருந்தாலே நோயாளிகள் கடும் அவதிப்படுவர். ஆனால், இந்த நோயாளியே கடந்த 2 ஆண்டுகளாக எந்தத் தொந்தரவும் இன்றி இயங்கி வந்துள்ளார்.

அதனால், அவரது உடல்நிலையை முழுமையாக ஆய்வுசெய்த மருத்துவர்கள் பெரிய அறுவைச் சிகிச்சைக்குப் பதிலாக லேப்ராஸ்கோபி மற்றும் எண்டோஸ்கோபி மூலம் சிறுநீரகத்திலுள்ள கற்களைப் பிரித்தெடுக்க முடிவுசெய்தனர்.

இதற்காக கீ ஹோல் அறுவைச் சிகிச்சையைத் தொடங்கினர். மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த சிகிச்சையில் நோயாளியின் சிறுநீரகத்திலிருந்து 156 கற்கள் வெளியே எடுக்கப்பட்டன.

தற்போது ஆரோக்கியமாக உள்ள அவர் வழக்கமான தினசரி வேலைகளை இயல்பாகச் செய்துவருகிறார்.

இந்தியாவிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு, ஒரு நோயாளியிடமிருந்து 156 சிறுநீரகக் கற்கள் பிரித்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.