தங்களுக்கு அதிக வரி விதிக்கக்கோரி உலகக் கோடீஸ்வரர்கள் நூதனக் கோரிக்கை வைத்துள்ள தகவல் அனைவரையும் அதிரவைத்துள்ளது.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தக் கோரிக்கை பற்றிப் பார்க்கலாம் வாங்க…
சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் அண்மையில் உலகப் பொருளாதார மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட உலகப் பெருங்கோடீஸ்வரர்கள் பலர் வீடியோகான்பெரன்ஸ் வாயிலாகப் பேசினர்.
அதன்பின்னர், அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, பிரிட்டன், நார்வே, டென்மார்க், ஆஸ்திரியா, நெதர்லாந்து, ஈரான் நாடுகளைச் சேர்ந்த 102 கோடீஸ்வரர்கள் கையெழுத்திட்டுள்ள அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையில், கோவிட் 19 வைரஸ் உலகை ஆட்டிப் படைத்த 2 ஆண்டுகளில் 10 உலகப் பெருங்கோடீஸ்வரர்களின் சொத்து இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. அதேசமயம், வறுமையும் ஏற்றத்தாழ்வும் அதிகரித்துள்ளது. இதற்குத் தற்போதைய வரிவிதிப்பு முறை நியாயமாக இல்லாததே காரணம். இதனால் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகின்றனர்.
அதனால், எங்களைப் போன்ற பெருங்கோடீஸ்வரர்களுக்கு அதிக வரி விதிக்கக் கேட்டுக்கொள்கிறோம். ஒவ்வொரு நாடும் பெருங்கோடீஸ்வரர்களுக்கு அதிக வரிவிதிப்பதன்மூலம் ஓராண்டில் 189 லட்சம் கோடி ரூபாய் கிடைக்கும்.
இந்தத் தொகை உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தவும், 230 கோடிபேரை வறுமையில் இருந்து மீட்கவும் உதவும் என்று கூறப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கோடிக்கணக்கானோர் வேலையையும் வருமானத்தையும் இழந்துள்ள நிலையில், கோடீஸ்வரர்களின் இந்தத் தாராள மனது உலக மக்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.