நாய்க்கறி உணவுக்குத் தடை

379
Advertisement

தென்கொரியாவில் நாய்க்கறி உணவுக்குத் தடைவிதிக்கப் போவதாக அந்நாட்டு ஜனாதிபதி மூன் ஜே இன் கூறியுள்ளார்.

தென்கொரியாவில் நாய்க்கறி உணவு பிரபலமானது. இறைச்சிக்காக ஓராண்டுக்கு ஒரு மில்லியன் நாய்கள் கொல்லப்பட்டு வந்தன. ஆனால், அண்மைக்காலமாக இந்த எண்ணிக்கை குறைந்து வந்தது. அத்துடன் நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்க்கும் போக்கும் அங்குள்ளவர்களிடம் அதிகரித்துள்ளது.

மேலும், இப்போதுள்ள இளைஞர்களுக்கும் நாய்க்கறி உணவில் நாட்டமில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இதன்விளைவாக நாட்டின் மிகப்பெரிய மூன்று நாய்க்கறிச் சந்தைகள் மூடப்பட்டுவிட்டன.

2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் 84 சதவிகிதத் தென்கொரியர்கள் ஒருபொழுதும் நாய்க்கறியை உண்டதில்லை என்பதும், எதிர்காலத்திலும் நாய்க்கறி உணவை சாப்பிட விரும்பவில்லை என்பதும் தெரியவந்தது. மேலும், 59 சதவிகிதம்பேர் நாய்க்கறி உணவைத் தடைசெய்யவும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு தென்கொரிய அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாய் இறைச்சியைத் தடைசெய்ய வேண்டும் என்னும் கோரிக்கை வலுப்பெற்று வந்தது.

இந்நிலையில், இதுவே நாய்க்கறி உணவைத் தடைசெய்ய தக்க தருணம் என்று கருதிய அந்நாட்டு ஜனாதிபதி இதுதொடர்பான முடிவை எடுத்துள்ளது மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஜனாதிபதியின் இந்த முடிவை அங்குள்ள விலங்குகள் உரிமைக் குழுக்கள் வரவேற்றுள்ளன. என்றாலும், எப்போதிருந்து இந்த முடிவு உத்தரவாக நடைமுறைக்கு வரும் என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

நாய்கள் மற்றும் பூனைகளைக் கொடூரமாகக் கொல்வதைத் தடைசெய்யும் சட்டம் தென்கொரியாவில் உள்ளது. அவற்றின் இறைச்சியை உண்பதற்குத் தடைவிதிக்கும் சட்டம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.